2008-11-18 14:19:11

காங்கோ அகதிகளின் நிலை பற்றி அருட்தந்தை லொம்பார்தி


நவ.18,2008. தீமையையும் வன்முறையையும் எதிர்த்து செயல்படுவதற்கு விசுவாசிகள் அன்பு என்னும் ஆயுதத்தால் தங்களை நிறைக்குமாறு திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருட்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.

காங்கோ ஜனநாயகக் குடியரசின் கீவு வட மாகாணத்தில் அகதிகளின் நிலை பற்றி வத்திக்கான் தொலைக்காட்சியில் பேசிய அருட்தந்தை லொம்பார்தி, அக் குடியரசில் ஏழைகள் படுகொலை செய்ய்ப்படுவது பொது மக்களின் கருத்தைப் புறக்கணிப்பதாக இருக்கின்றது என்றார்.

கீவு வட மாகாணத்திலிருந்து வந்து கொண்டிருக்கும் செய்திகள் கவலை தருவதாக உள்ளன என்றும் அந்நாட்டில் அப்பாவி மக்கள் எதிர் நோக்கும் வன்முறைகள், அழிவுகள் மற்றும் சூறையாடல்கள் குறித்து திருத்தந்தையும் கவலை தெரிவித்தார் என்றும் அருட்தந்தை லொம்பார்தி கூறினார்.

1998 ஆம் ஆண்டு முதல் காங்கோ ஜனநாயகக் குடியரசில் இடம் பெற்று வரும் சண்டைகள் மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளால் சுமார் 54 இலட்சம் பேர் இறந்துள்ளனர். இன்னும் கடந்த ஆகஸ்டில் சண்டை மீண்டும் தொடங்கியதையடுத்து 2 இலட்சத்து 50 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர் என்று சர்வதேச மீட்புக் குழு அறிவித்துள்ளது.










All the contents on this site are copyrighted ©.