2008-11-17 15:39:12

அன்னைமரியா தமது கொடைகளைப் பகிர்ந்து கொண்டது போல விசுவாசிகளும் செயல்பட அழைப்பு – திருத்தந்தை 16ம் பெனடிக்ட்


நவ.17,2008. விசுவாசிகள், விசுவாசமென்னும் கொடையை மறக்கக் கூடாது, கடவுளுக்கும் பயப்படக் கூடாது, ஆனால் கிறிஸ்துவால் நமக்குக் கொடுக்கப்பட்ட கொடையாகிய அவரைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா சதுக்கத்தில் ஞாயிறு நண்பகலில் கூடியிருந்த ஏறத்தாழ முப்பதாயிரம் விசுவாசிகளுக்கு ஞாயிறு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, தாலந்து உவமை குறித்த விளக்கத்தில் நமது திறமைகளைச் செயல்படுத்துவதற்குப் பயம் தடையாக இருக்கின்றது என்றார்.

தாலந்து என்பது மிகவும் மதிப்புடைய உரோமன் நாணயம், புகழ்பெற்ற இந்த உவமை நாம் ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டிய சொந்தத் திறமைகளோடு தொடர்பு கொண்டதாக இருக்கின்றது என்றார் திருத்தந்தை.

இந்தக் கொடைகள், நம் இயல்பான பண்புகளையும் கடந்து நாம் மிகுந்த கனிதரும் பொருட்டு நம் ஆண்டவர் இயேசு மரபுரிமையாக நமக்கு விட்டுச் சென்ற வளங்களையும் குறித்து நிற்கின்றன என்ற அவர், இக்கொடைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு மதிக்கப்பட வேண்டியதன் உள்ளார்ந்த கண்ணோட்டத்தையும் உணர்த்துகின்றன என்றார்.

தலைவனிடமிருந்து பெற்ற பணத்தைத் அவருக்குப் பயந்து அவர் திரும்பி வரும் வரை நிலத்தில் புதைத்து வைப்பதால் எந்தப் பலனும் கிடைக்காது, எடுத்துக்காட்டாக திருமுழுக்கு, திருநற்கருணை, உறுதிபுசூதல் போன்ற கொடைகளை முற்சார்பு மற்றும் கடவுளைப் பற்றிய தவறான எண்ணங்களால் புதைத்து வைப்பவர்கள் இயேசுவின் எதிர்பார்ப்புக்களைப் புதைக்கிறார்கள் என்றும் திருத்தந்தை கூறினார்.

எனினும் இவ்வுவமை, ஒருவர் தான் பெற்ற கொடைகளில் மகிழ்ந்து, அவற்றை பயம் மற்றும் பொறாமையால் மறைத்து வைக்காமல் மிகுந்த பலன்தரும் பொருட்டு பகிர்ந்து வாழ்வதால் கிடைக்கும் .நல்ல பலன்கள் பற்றி அதிகம் வலியுறுத்துகின்றது என்றார் திருத்தந்தை.

உண்மையில் கிறிஸ்து நமக்குக் கொடுக்கும் கொடைகள் பிறருக்காகச் செலவழிக்கப்படும் போது பலுகுகின்றன என்றும் திருத்தாதர் புனித பவுல் நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளது போல இக்கொடைகள் செலவழிக்கப்பட வேண்டும், எல்லாருடனும் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும், முதலீடு செய்யப்பட வேண்டும் என்றும் திருத்தந்தை கூறினார். .








All the contents on this site are copyrighted ©.