2008-11-15 14:05:36

கருவில் வளரும் குழந்தையும் அன்புடன் ஏற்கப்பட வேண்டும் – திருத்தந்தை 16ம் பெனடிக்ட்


நவம்.15,2008. திருப்பீட நலவாழ்வுத்துறை நடத்திய நோயுற்ற சிறார் குறித்த 23ம் சர்வதேச மாநாட்டில் பங்கு கொண்ட சுமார் 450 பேரை வத்திக்கானில் இன்று சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, மருத்துவர்கள் தங்களது ஒவ்வொரு சிகிச்சையின் போதும், குழந்தையின் முழு உரிமைகளையும் மனிதன் என்ற மாண்பையும் கவனத்தில் கொண்டு அதன் உண்மையான வாழ்வில் அக்கறை காட்டுமாறு வலியுறுத்தினார்.

ஒவ்வோர் ஆண்டும் 40 இலட்சம் குழந்தைகள் பிறந்த 26 நாட்களுக்குள்ளாக இறக்கின்றன என்பதை நினைவில் கொண்டிருக்குமாறும் கேட்டுக் கொண்ட அவர், குழந்தையின் நோய் மற்றும் அதற்கு சிகிச்சை அளிக்கப்படும் விதம் குறித்து பெற்றோருக்குத் தெரியப்படுத்துமாறும் கூறினார்.

குழந்தை, சமூகத்திற்குக் கொடுக்கப்பட்ட விலைமதிப்பில்லா ஒரு கொடை என்பதால், அதனுடைய மாண்பு அது கருவில் வளரும் போதும் மதிக்கப்படுமாறும் அவர் வலியுறுத்தினார்.

ஒவ்வொரு மனிதனும் இறைவனின் சாயலில் படைக்கப்பட்டவன், இது ஒவ்வொரு குழந்தையை வரவேற்பதிலும் உணரப்பட வேண்டும் என்ற திருத்தந்தை, அனாதைக் குழந்தைகள், கைவிடப்பட்ட, எய்ட்ஸால் தாக்கப்பட்ட, ஆயுதம் தாங்கிய மோதல்களால் பாதிக்கப்பட்ட, பசியால், வறுமையால், கஷ்டத்தினால் குழந்தைப் பருவத்திலே இறக்கும் குழந்தைகளையும் நினைவுபடுத்தி திருச்சபை அவர்களுக்குச் செய்து வரும் சேவைகளையும் குறிப்பிட்டார்.








All the contents on this site are copyrighted ©.