2008-11-15 14:11:27

அப்பாவி மக்களின் கொலைகள் அல்லது பயங்கரவாதத்தை நியாயப்படுத்துவதற்கு சமயம் பயன்படுத்தப்படக் கூடாது – ஐ.நா.பொது அவை


நவ.14,2008. அப்பாவி மக்களைக் கொலை செய்வதை நியாயப்படுத்துவதற்கும் பயங்கரவாதச் செயல்களுக்கும் சமயம் பயன்படுத்துவது குறித்தத் தனது வருத்தத்தை ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவையின் உயர்மட்டக் கூட்டம் தெரிவித்துள்ளது.

சவுதி அரேபிய அரசர் அப்துல்லாவின் முயற்சியினால் நடத்தப்பட்ட அமைதிக் கலாச்சாரம் என்ற இரண்டு நாள் கூட்டத்தில் பல்வேறு மதங்கள் மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையே சகிப்பற்றதன்மை, பாகுபாடு, துன்புறுத்துதல் ஆகியவை அதிகமாக இடம் பெறுவது குறித்த கவலையும் தெரிவிக்கப்பட்டது.

பல்வேறு மதங்கள், பண்பாடுகள் மற்றும் கலாச்சாரங்களுக்கு மத்தியில் உரையாடல், மனித உரிமைகளை மதித்தல் மூலம் ஒருவர் ஒருவரைப் புரிந்து கொள்ளுமாறும் அக்கூட்டத்தில் அழைப்புவிடுக்கப்பட்டது.

குடும்ப அமைப்பையும் சுற்றுச் சூழலையும் பாதுகாத்து கல்வியை வளர்த்து ஏழ்மையை ஒழித்து, போதைப் பொருள், குற்றங்கள், பயங்கரவாதம் ஆகியவற்றுக்கு எதிராய்ப் போராடுவதற்கு இக்கூட்டத்தில் கலந்து கொண்ட நாடுகள் உறுதி கொடுத்தன.

இச்சவால்களை எதிர்கொள்வதற்கு மதங்களின் பங்கையும் நன்னெறிக் கூறுகளையும் இக்கூட்டத்தினர் சுட்டிக்காட்டினர்.

சவுதி அரேபிய அரசர் அப்துல்லா, அமெரிக்க ஐக்கிய நாட்டு அதிபர் ஜார்ஜ் புஷ், பிரிட்டன் பிரதமர் கோர்டன் பிரவ்ன், இஸ்ரேல் அரசுத்தலைவர் ஷிமோன் பேரஸ், ஆப்கான் அரசுத்தலைவர் ஹமித் கார்சாய் பாகிஸ்தான் அரசுத்தலைவர் அசிப் அலி ஜர்தாரி உள்ளிட்ட சுமார் 70 நாடுகளின் தூதர்களும் மூத்த அதிகாரிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.








All the contents on this site are copyrighted ©.