2008-11-11 15:09:31

பல குழந்தைகள் பிறந்த 26 நாட்களுக்குள் இறக்கின்றன - கர்தினால் பாராகான்


நவம்.11,2008. இன்று பல குடும்பங்கள் தங்களது கல்விக் கடமையை மறந்து வாழ்வதால் பிள்ளைகள் பலவழிகளில் பாதிக்கப்படுகின்றனர் என்று திருப்பீட நலவாழ்வுத்துறைத் தலைவர் கர்தினால் ஹாவியர் லொசானோ பாராகான் கவலை தெரிவித்தார்.

வருகிற வியாழன் முதல் சனிக்கிழமை வரை, நோயாளிக் குழந்தைகளுக்கான மேய்ப்புப்பணி என்ற தலைப்பில் வத்திக்கானில் நடைபெறவுள்ள 23ம் சர்வதேச கருத்தரங்கு பற்றி நிருபர் கூட்டத்தில் இன்று விளக்கிய கர்தினால் லொசானோ பாராகான் இவ்வாறு கூறினார்.

தாயும் தந்தையும் வேலைக்குச் செல்வதாலும் தம்பதியர் பிரிந்து வாழ்வதாலும் பிள்ளைகளுக்குக் கிடைக்க வேண்டிய அன்பும் பராமரிப்பும் கிடைப்பதில்லை என்ற அவர், இந்நிலையில் நோயாளிக் குழந்தைகளுக்கான மேய்ப்புப்பணிகள் பற்றி இக் கருத்தரங்கு பரிசீலிக்கும் என்றார்.

இன்று உலகில் பல குழந்தைகள் தங்களையும் தங்களது பருவ உணர்வுகளையும் கைவிட்டு வாழ்வதற்கு தொலைக்காட்சிகளும் இன்டர்நெட் பன்வலை அமைப்புகளும் கணணி, கைதொலைபேசி போன்றவைகளும் காரணம் என்று குறிப்பிட்ட கர்தினால், பல நாடுகளில் பள்ளிக்குச் செல்லும் வயதுடைய ஒரு குழந்தை, 15000 மணி நேரம் தொலைக்காட்சியை பார்க்கின்றது என்று ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது என்றார்.

போதைப் பொருள், வனமுறை, பாலியல் ஆகியவை தொடர்பான ஒரு சூழலில் 18000 கொலைகள் இடம் பெறவும் தொலைக்காட்சிகள் காரணமாகின்றன என்றும் அவர் குறை கூறினார்.

கடந்த பத்து ஆண்டுகளில் ஆயுதம் தாங்கிய சண்டையில் 20 இலட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர், சுமார் 60 இலட்சம் குழந்தைகள் செயலிழந்துள்ளனர், கண்ணிவெடிகளால் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் ஊனமாக்கப்பட்டுள்ளனர், அதேவேளை 3 இலட்சம் குழந்தை படைவீரர்கள் உள்ளனர், 43 இலட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் எய்ட்ஸால் இறந்துள்ளனர் என்றும் சிறாரின் நிலையை விவரித்தார் கர்தினால் லொசானோ பாராகான்.

போதைப் பொருள் பிரச்சனை, ஏழ்மை, பள்ளிக்குச் செல்ல இயலாத குழந்தைகள் நிலை, குழந்தைத் தொழிலாளர் நிலை போன்றவைகளையும் குறிப்பிட்ட அவர், உலகில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 30 விழுக்காட்டினர் பசியினால் வாடுகின்றனர் என்றும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.