2008-11-11 15:13:42

நாத்சி ஆட்சியில் நடத்தப்பட்ட கொடுமைகளை ஐரோப்பா மறக்கக் கூடாது


நவம்.11,2008. ஜெர்மனியின் ஹிட்லரின் நாத்சி ஆட்சியில் நடத்தப்பட்ட கொடுமைகளை ஐரோப்பா மறக்கக் கூடாது, அத்துடன் இத்தகைய செயல்களை வரலாறு மீண்டும் செய்யக் கூடாது என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கேட்டுக் கொண்டார்.

கடந்த வாரத்தில் நூரம்பெர்க் மற்றும் தக்காவோவில் ஐரோப்பிய கலாச்சார அமைப்பைச் சேர்ந்த நாடுகளின் அமைச்சர்களுக்கு நடந்த கருத்தரங்கில் பேசிய கத்தோலிக்க கல்வி திருப்பேராயச் செயலர் பேராயர் ஜான் லூயி புரூகெ இவ்வாறு கூறினார்.

நூரம்பெர்க் நகர், பல நாத்சி கொள்கைவாதிகள் அடிக்கடி கூட்டம் நடத்திய அதேசமயம் மனித சமுதாயத்திற்கெதிராய் கடும் குற்றங்கள் புரிந்து தங்களையே கறைப்படுத்திக் கொண்டவர்கள் விசாரிக்கப்பட்ட இடமாக இருக்கின்றது என்றும் பேராயர் புரூகெ குறிப்பிட்டார்.

நாத்சி அட்டூழியங்கள், ஒரு சகாப்தத்தில் சுதந்திரமும் நீதியும் மறுக்கப்பட்டது பற்றியும் மனித மாண்பு காலால் மிதிக்கப்பட்டது பற்றியும் பேசுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

மனிதனை மதிக்காத சர்வாதிகாரம் மீண்டும் இடம் பெறாமல் இருப்பதைத் தவிர்ப்பதற்கு உரிமைகளும் சுதந்திரமும் இன்றியமையாதவை என்றும் பேராயர் புரூகெ குறிப்பிட்டார்.

 








All the contents on this site are copyrighted ©.