2008-11-11 15:10:41

ஒரிசாவில் மாநிலத்தில் கிறிஸ்தவர்களைத் துடைத்தழிப்பதற்கு இந்து தீவிரவாதக் குழுக்கள் முயற்சித்து வருகின்றன- கிறிஸ்தவப் பிரதிநிதிகள் குழு


நவம்.11,2008. ஒரிசா மாநிலத்தில் கிறிஸ்தவர்களைத் துடைத்தழிப்பதற்கு இந்து தீவிரவாதக் குழுக்கள் முயற்சித்து வருகின்றன என்று கிறிஸ்தவப் பிரதிநிதிகள் குழு ஒன்று குற்றம் சாட்டியுள்ளது.

கட்டாக்-புவனேஷ்வர் பேராயர் இரபேல் சீநாத் தலைமையிலான குழு ஒன்று முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை மாநில செயலகத்தில் நேற்று சந்தித்து மனு சமர்ப்பித்த போது இவ்வாறு புகார் செய்தது.

கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்கிய கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறைகளால் கந்தமால் மாவட்டத்தில் இன்னும் அமைதி எட்டாக்கனியாகவே இருக்கின்றது மற்றும் இன்னும் அங்கு கிறிஸ்தவர்கள் குறி வைத்துத் தாக்கப்படுகிறார்கள் என்றும் அம்மனு கூறுகிறது.

கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறைகளை, பழங்குடி இனத்தவர்க்கும் தலித் கிறிஸ்தவர்க்கும் இடையேயான இனச்சண்டை என்று இந்து தீவிரவாதக் குழுக்கள் பெயரிட்டுள்ளன என்றரைக்கும் அம்மனு, கிறிஸ்தவர்கள் கட்டாய மதமாற்றத்திற்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்றும் குறைகூறுகிறது.

கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவர்க்களாகவே வாழ்ந்து அவ்வாறே இறக்க விரும்புவதால் அவர்கள் முகாம்களிலிருந்து தங்கள் கிராமங்களுக்கு வருவதற்குப் பயப்படுகிறார்கள் என்றும் அம்மனு கூறுகிறது.

இன்னும், கந்தமால் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மத்திய ரிசர்வ் காவல்படை அடுத்தாண்டு பொதுத் தேர்தல் முடியும் வரை நீட்டிக்கப்பட வேண்டுமெனவும் கிறிஸ்தவப் பிரதிநிதிகள் குழு தனது கோரிக்கையை முதலமைச்சர் பட்நாயக்கிடம் முன்வைத்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.