2008-11-10 11:36:44

உலக யூதர்களுடன் திருத்தந்தையின் ஒருமைப்பாட்டுணர்வு


நவம்.10,2008. இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஆயிரக்கணக்காண யூதர்கள் கொல்லப்பட்டது, கைது செய்யப்பட்டது மற்றும் யூதச் செபக்கூடங்கள் அழிக்கப்பட்டது குறித்தத் தனது வருத்தத்தையும் மூவேளை செப உரையின் இறுதியில் தெரிவித்தார் திருத்தந்தை.

கிறிஸ்டால்நாக்ட் - உடைக்கப்பட்ட கண்ணாடி இரவு அதாவது 1938ஆம் ஆண்டு நவம்பர் 9க்கும் 10க்கும் இடைப்பட்ட இரவில் ஆயிரக்கணக்காண யூதர்கள் கொல்லப்பட்டது, கைது செய்யப்பட்டது மற்றும் யூதச் செபக்கூடங்கள் அழிக்கப்பட்டதன் 70ஆம் ஆண்டை நினைவுகூரும் யூதர்களுடன் தமது ஒருமைப்பாட்டுணர்வையும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தெரிவித்தார்.

ஜெர்மனியில் நாத்ஸிகளின் கோபம் யூதர்களுக்கு எதிராகக் கட்டவிழ்க்கப்பட்டது என்ற அவர், கடைகளும் அலுவலகங்களும் வீடுகளும் செபக்கூடங்களும் தாக்கப்பட்டன, பலர் கொல்லப்பட்டனர், ஜெர்மனியில் வாழ்ந்த யூதர்கள் திட்டமிட்டு வன்முறை அடக்குமுறைக்கு உள்ளாகினர், இது இறுதியில் யூதப்படுகொலையில் முடிந்தது என்றும் கூறினார்.

இந்த நினைவு, இத்தகைய கொடுமைகள் இனிமேல் உலகில் இடம் பெறாமலிருக்கவும், யூதமதவிரோதப்போக்கு ஒழிக்கப்படவும், ஒருவர் ஒருவரை மதித்து ஏற்பதற்கு இளைய தலைமுறைக்குக் கற்றுக் கொடுக்கவும் தூண்ட வேண்டும் என்றும் திருத்தந்தை கேட்டுக் கொண்டார்.








All the contents on this site are copyrighted ©.