2008-11-06 18:40:02

எகிப்து நாட்டின் வத்திக்கானுக்கான தூதரை திருத்தந்தை வரவேற்றார். 061108.


நவம்பர் 6 , இந்த வியாழன் காலை அரபுக் குடியரசின் எகிப்து நாட்டின் வத்திக்கான் திருப்பீடத்துக்கான தூதரைத் திருத்தந்தை வாழ்த்தி வரவேற்றுப் பேசினார் . எகிப்து நாட்டின் வத்திக்கானுக்கான தூதர் திருமதி அலி ஹமதா மெக்கேமார், அந்நாட்டின் தலைவர் முகம்மது ஹோஸ்னி முபாரக் சார்பிலும் நாட்டு மக்கள் சார்பிலும், சந்திப்பின் தொடக்கத்தில், திருத்தந்தைக்கு வாழ்த்துக்கூறினார் . எகிப்து நாடு பழம்பெரும் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் கலைப்பொருட்களையும் கொண்டது என்றார் திருத்தந்தை .பல்வேறு கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் ஒன்றிணைத்து பல ஆயிரம் ஆண்டுகளின் பாரம்பரியச் சிறப்பையும் நவ யுகப் புதுமைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது எனவும் திருத்தந்தை மேலும் கூறினார் . 60 ஆண்டுகளுக்கும் மேலாக வத்திக்கானுக்கும் எகிப்து நாட்டுக்குமிடையே நல்ல உறவுகள் இருப்பதாகத் திருமதி அலி ஹமதா தொடக்கத்தில் கூறியிருந்தார் , இந்த நல்ல உறவுக்கு இறைவனுக்கு நன்றி கூறுவதாகத் திருத்தந்தை கூறினார் . இந்த உறவு நம் நல்லெண்ணத்தையும் ஒருமைப்பாட்டையும் வளர்க்கும் எனவும் திருத்தந்தை எடுத்துரைத்தார் . அமைதிக்காக , நாடுகளிடையேயும் மக்களிடையேயும் பரஸ்பர உணர்வை உருவாக்க எகிப்து எடுக்கும் முயற்சிகளைப் பாராட்டிய திருத்தந்தை அந்நாட்டுக்கு வரும் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ புலம் பெயர்ந்தோருக்கு அபயமளிப்பதற்கு நன்றி கூறி இது எந்நாளும் தொடரட்டும் என்றார் . அந்நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்கூறிய திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட், திருமதி அலி ஹமதாவின் தூதரகப்பணி சிறப்பாக அமையவும் அவருக்கும் , அவர் குடும்பத்தினருக்கும், நாட்டுத்தலைவர்களுக்கும் வாழ்த்துக்கூறி அவர்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல கடவுளின் ஆசியை விழைந்தார் .








All the contents on this site are copyrighted ©.