2008-11-06 18:45:29

கத்தோலிக்க இஸ்லாமிய கருத்தரங்கு உறுப்பினர்களுக்குத் திருத்தந்தையின் உரை . 06 நவம்பர் , 08 .


கத்தோலிக்க இஸ்லாமியக் கருத்தரங்கில கலந்து கொண்ட உறுப்பினர்களின் சார்பாக கர்தினால் ஜான் லூயி டவ்ரானும் , சேய்க் முஸ்தபா செரீக் மற்றும் செய்யத் ஹூசேய்னும் திருத்தந்தைக்கு வாழ்த்துச் செய்தி கூறினர் . அதற்கு நன்றி கூறிய திருத்தந்தை அனைவருக்கும் தமது வாழ்த்தைத் தெரிவித்தார் . இந்தக் கருத்தரங்கு இரு சமயத்தாரும் ஒருவர் மற்றவர் மீது கொண்டுள்ள நல்ல எண்ணத்தைக் காட்டுவதாகத் திருத்தந்தை கூறினார் . இரு சமயத்தவரும் ஒருவர் மற்றவரைப் புரிந்து கொள்ள இது மேலும் ஒரு நல்ல முயற்சி என்றும் கூறினார் . கிறிஸ்தவ மரபு , கடவுள் அன்பாக இருப்பதாகக் கூறுகிறது . அன்பின் காரணமாகத்தான் கடவுள் இவ்வுலகைப் படைத்தார் . அன்பின் காரணமாகத்தான் கிறிஸ்து மனித வரலாற்றில் நம்மோடு மனித உருவில் வாழ்ந்தார் . கடவுள் அன்பு, கிறிஸ்துவில் முழுமையாகவும் , உறுதியாகவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது . இதன் அடிப்படையில் நாமும் பிரதி அன்பை வெளிக்காட்ட அழைக்கப்படுகின்றோம் . கடவுளுக்கும் , நம்மோடு வாழும் பிறருக்கும் அன்பைப் பரிமாற அழைக்கப்படுகின்றோம் என்றார் திருத்தந்தை . இந்தக் கருத்தரங்கில் கடவுளுக்கும் பிறருக்கும் அன்பைப் பரிமாறுவது பற்றி இரு சாராரும் ஒத்த கருத்தைக் கொண்டிருக்க முடிந்தது என்பது தமக்கு மகிழ்ச்சி தருவதாகத் திருத்தந்தை கூறினார் . ஏழை , எளியோருக்கும் , வன்முறைகளால் துன்புறுவோர்க்கும் , நீதியின்றி துன்புறுத்தப்படுவோர்க்கும் நாம் உதவிகள் புரிய அழைக்கப்படுகிறோம் எனத் திருத்தந்தை மேலும் கூறினார் . இந்தக் கருத்தரங்கில் நாம் கடவுளுக்கும் அயலார்க்கும் ஆழமாக அன்பு செய்ய உறுதி எடுப்போம் என்று கூறி அனைவருக்கும் கடவுளுடைய இரக்கமிக்க அருளையும் பாதுகாப்பையும் வேண்டி நம்மைக் கடவுள் ஆசீர்வதிப்பாராக என வாழ்த்துக் கூறினார் திருத்தந்தை .








All the contents on this site are copyrighted ©.