2008-11-05 17:41:51

பாரக் ஒபாமாவுக்குத் திருத்தந்தை வாழ்த்துச் செய்தி. 05 நவ. 08 .


அமெரிக்க ஐக்கிய நாடுகளின் குடியரசுத் தலைவராக பதவி ஏற்க உள்ள திரு.பாரக் ஒபாமாவுக்குத் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார் . ஒபாமாவுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் தம் செபங்களையும் காணிக்கையாக்கியுள்ளார் . வத்திக்கானின் செய்தித்தொடர்பாளர் அருள்தந்தை பெடரிக்கோ லொம்பார்டி இது பற்றிக் கூறும்போது , திருத்தந்தையின் வாழ்த்துச் செய்தி திரு. ஒபாமாவுக்கு நேரடியாகத் தெரிவிக்கப்பட்டதால் அதை வத்திக்கான் வெளியிடவில்லை எனக்கூறினார் . வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த , கறுப்பு இனத்தைச் சேர்ந்த ஒருவர் முதல் முறையாக அமெரிக்க ஐக்கிய நாட்டின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதற்குத் திருத்தந்தை பாராட்டுத் தெரிவித்துள்ளார் . ஒபாமாவையும் , அவருடைய மனைவியையும் , மக்களையும் திருத்தந்தை பாராட்டியுள்ளார் என அருள்தந்தை லொம்பார்டி தெரிவித்துள்ளார் . அமெரிக்காவுக்கும் உலக நாடுகள் அனைத்துக்கும் அமெரிக்க அதிபர் முக்கியப் பொறுப்புக்களைக் கொண்டுள்ளதால் கடவுளுடைய அருள் அவரை வழி நடத்துமாறு வேண்டிக்கொள்வதாகத் திருத்தந்தை கூறியுள்ளதாகத் தந்தை லொம்பார்டி கூறினார் . உலக அமைதி , ஒற்றுமை , மற்றும் நீதி நிலைபெறுமென எதிர்பார்ப்பதாகவும் இறை ஆசி துணை நிற்குமெனவும் ஒபாமாவுக்கும் அமெரிக்க மக்களுக்கும் திருத்தந்தை நல்லாசி வழங்கியுள்ளதாகத் தந்தை லொம்பார்டி தெரிவித்தார். இந்த வாழ்த்துச் செய்தி அமெரிக்காவின் வத்திக்கானுக்கான தூதர் மேரி ஆன் கிளெண்டன் வழியாக அனுப்பப்பட்டதாகவும், வத்திக்கானின் செயலர் கர்தினால் தார்சீசியோ பெர்த்தோனேயும் ஒபாமாவுக்கு வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளதாகத் தந்தை லொம்பார்டி தெரிவித்தார். அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்கும் ஜனவரி 20 ஆம் தேதி திருத்தந்தை பாராட்டுச் செய்தியை அதிபர் பதவி ஏற்கும் நாளில் திருத்தந்தையர் வாழ்த்துத் தெரிவிக்கும் வழக்கப்படி அனுப்ப உள்ளதாகவும் தந்தை லொம்பார்டி மேலும் தெரிவித்தார் .








All the contents on this site are copyrighted ©.