2008-11-03 19:19:03

குடியேற்றதாரர்கள் பிரச்சனைபற்றிப் பேசுகிறார் பேராயர் மார்க்கெட்டோ. 03 நவ. 08 .


குடியேற்றதாரர்களின் மனித உரிமைகள் மதிக்கப்படுவதுடன் எவ்விதப் பாகுபாடுமின்றி, குறிப்பாக பெண்கள் , சிறார் முதியோர், ஊனமுற்றோர் ஆகியோர் முழு மனித மாண்புடன் நடத்தப்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார் குடியேற்றதாரர்களுக்கான திருப்பீட அவையின் செயலர் பேராயர் அகஸ்தீனோ மார்க்கெட்டோ . குடிபெயர்தல் மற்றும் வளர்ச்சி குறித்து பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் இடம்பெற்ற இரண்டாவது உலக கருத்தரங்கில் உரையாற்றிய பேராயர், குடியேற்றதார அகதிகளைக் காப்பதற்கான சர்வதேசச் சட்டங்கள் இருப்பினும் அவர்கள் மனிதாபிமான முறையில் நடத்தப்படவில்லையெனில் எங்ஙனம் நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிக்க முடியும் என்ற கேள்வியையும் எழுப்பினார் . குடியேற்றதாரர்கள் மற்றும் அகதிகளைப் பொறுத்தவரையில் அவர்களின் சொந்த நாடு மற்றும் அவர்கள் குடியேறும் நாடு என இருதரப்பினருக்கும் இருக்கும் கடமைகளையும் வலியுறுத்தினார் பேராயர் மார்க்கெட்டோ . குடும்பத்தோடு இணைந்து வாழ்வதற்கான உரிமை , குடியேறியுள்ள நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பதற்கான வாய்ப்பு , தன் சேமிப்பைச் சொந்த நாட்டின் உறவினர்களுக்கு அனுப்புவதற்கான உரிமை போன்றவைகளும் மதிக்கப்படவேண்டும் என அழைப்புவிடுத்தார் அவர் . குடியேற்றதாரர்களை ஒரு பிரச்சனையாக நோக்காமல் நாட்டின் முன்னேற்றத்துக்கு பங்களிக்க வரும் ஒரு வரப்பிரசாதமாக , கொடையாக நோக்கவேண்டும் எனவும் பேராயர் மார்க்கெட்டோ கேட்டுக்கொண்டார் .








All the contents on this site are copyrighted ©.