2008-10-29 15:42:22

ஒரிசாவில் கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி பலமாகத் தாக்குதலுக்குள்ளான குரு பெர்னார்டு டிகால் சிகிச்சை பலனின்றி காலமானார்


அக்.29,2008. ஒரிசாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக இடம் பெற்ற தாக்குதலின் போது கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி பலமாகத் தாக்குதலுக்குள்ளான அருட்திரு பெர்னார்டு டிகால் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மருத்துவமனையில் காலமானார்.

கட்டாக் - புவனேஷ்வர் உயர் மறைமாவட்டத்தின் பொருளாளராகப் பணியாற்றி வந்த குரு டிகாலின் மரணத்துடன் இத்தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது.

ஆகஸ்ட் 24ம் தேதி இரவு குரு டிகாலை பலமாகத் தாக்கிய மதவெறிக் கும்பல் ஒன்று அவர் இறந்துவிட்டதாக எண்ணி நிர்வாணமாக சாலையிலேயே அவரைப் போட்டுவிட்டுச் சென்றது.

பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் அது பலனில்லாமல் போக கடந்த சனிக்கிழமை சென்னை புனித தோமையார் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டு மூளையில் இரத்தக்கட்டி உறைவை அகற்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அது பலனின்றி போக நேற்று மாலை மருத்துவமனையில் காலமானார்.

மதத்தாக்குதலில் ஏற்பட்ட தலைக்காயங்களின் காரணமாக அருட்திரு பெர்னார்டு டிகால் சென்னை மருத்துவமனையில் இறந்த போது கட்டாக் - புவனேஷ்வர் பேராயர் இரபேல் சீனத் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.