2008-10-27 15:06:55

விவிலியம் பற்றிய 12வது உலக ஆயர்கள் மாமன்றம் நிறைவு


அக்.27,2008. திருவிவிலியம். இது மனித வார்த்தைகளில் கடவுளின் வார்த்தை. ஏனெனில் இதன் ஆசிரியர் இருவர். அவர்களில் ஒருவர் கடவுள். மற்றவர் மனிதன். இது இறைவெளிப்பாட்டின் பதிவேடு. கடவுள் தம்மைப் பற்றியும் தம் மீட்பின் திட்டத்தைப் பற்றியுமான ஆழ்ந்த உண்மைகளை சொல்லாலும் செயலாலும் வெளிப்படுத்துகிறார். இவ்வுண்மைகளை மனிதன் தன் சொந்த சக்தியினால் அறிய முடியாது. எனவே இறைவெளிப்பாடு இன்றியமையாதது.

விவிலியம், விசுவாசத்தின் இலக்கியம், மீட்பின் வரலாறு, இறையரசின் வரலாறு என்றெல்லாம் போற்றப்படுகிறது. இறைவன் தம் மக்களுக்கு அனுப்பியிருக்கும் அன்புக்கடிதமே விவிலியம் என்று புனித ஜான் கிறிஸ்தோத்தம் சொல்லியிருக்கிறார். இது தூய ஆவியின் ஏவுதலால் எழுதப்பட்டு திருச்சபையால் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற 73 புத்தகங்களின் தொகுப்பாகும். இது உலகில் மிக அதிகமாக வாசிக்கப்படும் புத்தகமும் ஆகும். இதன் நூல்கள் 2454 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன, மேலும் ஏறத்தாழ 4500 மொழிகளில் மொழி பெயர்க்கப்படவுள்ளன என்று கத்தோலிக்க விவிலிய கூட்டமைப்பின் தலைவர் ஆயர் வின்சென்சோ பாலியா கூறியிருக்கிறார்.

அன்பர்களே, இத்தகைய சிறப்புமிக்க புனித நூலை மையமாக வைத்து இம்மாதம் 5ம் தேதி முதல் 26ம் தேதி வரை அதாவது இஞ்ஞாயிறு வரை உலக ஆயர்கள் மாமன்றம் வத்திக்கானில் நடைபெற்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் மடல், அதிகாரம் 9, வசனம் 16ல் சொன்னார்- நான் நற்செய்தியை அறிவிக்கிறேன் என்றாலும் அதில் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு! என்று. இந்தப் புனித பவுல் பிறந்ததன் 2000 மாம் ஆண்டை முன்னிட்டு பவுல் ஆண்டு சிறப்பிக்கப்பட்டு வரும் இவ்வாண்டில் இவ்வசனம் அகிலத் திருச்சபையில் பல தடவைகள் பல இடங்களில் சொல்லப்பட்டு வருகின்றது. இந்த உலக ஆயர்கள் மாமன்றத்தின் முத்தாய்ப்பாக இஞ்ஞாயிறு காலை வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் நிகழ்த்திய கூட்டுத் திருப்பலி மறையுரையில், நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு என்ற இந்தத் திருத்தூதரின் வார்த்தைகளை இந்தப் பவுல் ஆண்டில் எனதாக்க விரும்புகிறேன் என்றார்.

RealAudioMP3

326 மாமன்றத் தந்தையர் மற்றும் உடன் உழைப்பாளர்களுடன் சேர்ந்து திருத்தந்தை நிகழ்த்திய இத்திருப்பலியில் இஞ்ஞாயிறு திருப்பலியின் நற்செய்தி வாசகத்தை மையப்படுத்தி மறையுரையைத் தொடங்கினார். இறைவனின் சட்டம் முழுவதும் அன்பில் சுருக்கப்படடுள்ளது என்றார். திருச்சட்ட அறிஞர் ஒருவர் இயேசுவிடம், போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது என்று கேட்டார். மோசே சட்டத்தில் 613 விதிமுறைகள் உள்ளன. எனவே இவற்றில் தலைசிறந்தது எது என்று சொல்வது எளிதல்ல. எனினும் இயேசு எந்தத் தயக்கமுமின்றி அன்பு என்று பதில் சொன்னார். ஆயர்கள் மாமன்றத்தை நிறைவு செய்யும் இத்திருப்பலியில் கடவுளுக்கு அன்புடன் செவிசாய்ப்பது பிற சகோதரர்களுக்கு உதவி செய்வது ஆகியவற்றுக்கிடையேயான பிணைப்பை உணருகிறோம். நிறைய மக்கள் கிறிஸ்துவையும் அவரது நற்செய்தியையும் சந்திக்கும் வழிகளைத் தேடுகிறார்கள். கிறிஸ்துவில் தங்கள் வாழ்வின் பொருளைக் கண்டடைய வேண்டிய தேவை நிறைய மக்களுக்கு அவசியமாக இருக்கின்றது. எனவே இயேசுவில் மையம் கொண்ட இறைவார்த்தைக்குச் சான்று சொல்ல வேண்டிய வாழ்க்கை திருச்சபையின் மறைப்பணிக்கு இன்றியமையாததாக இருக்கின்றது. நற்செய்திப் பணிக்கு விவிலியம் மிகவும் முக்கியம். புதிய மில்லேனேயம் தொடங்கியுள்ள இக்காலக் கட்டத்தில் புதிய நற்செய்திப் பணிக்கு திருச்சபை தன்னை அர்ப்பணிப்பதற்கு அது இறைவார்த்தையால் ஊட்டம் பெற வேண்டும். எனினும் விவிலியத்திற்குத் திருச்சபை கொடுக்கும் விளக்கத்திற்கு மாறான புரிந்து கொள்ளுதல் குறித்து எச்சரிக்கை தேவை. விவிலியம் மக்களுக்கான மக்களின் புத்தகம். எனவே மக்கள் தங்கள் வாழ்க்கையின் மூலம் அதற்குச் சாட்சி சொல்ல வேண்டும்.

இந்த உலக ஆயர்கள் மாமன்றத்தில் கலந்து கொள்ள இயலாத சீன ஆயர்களைச் சிறப்பாக நினைவுகூர்வதாகத் தெரிவித்தார். அவ்வாயர்கள் கிறிஸ்து மீது கொண்டிருக்கும் அன்பு, அகிலத் திருச்சபையுடனான ஐக்கியம், திருத்தூதர் பேதுருவின் வழி வருபவருக்கு விசுவாசமாக இருத்தல் ஆகியவைகளுக்கு நன்றி தெரிவித்தார். தலைமை ஆயர்களாக இருக்கும் அவர்கள் சீனாவில் கத்தோலிக்க சமூகத்தை முன்னோக்கி நடத்திச் செல்வதற்குத் தேவையான சக்தியையும் ஞானத்துடன்கூடிய அப்போஸ்தலிக்க ஆர்வத்தையும் இறைவன் கொடுத்தருள செபிப்போம் என்றும் கூறினார்

RealAudioMP3

இன்னும் இம்மாமன்றத்தின் கனிகளை அன்னைமரியிடம் அர்ப்பணிப்பதாகக்கூறி தமது மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.