2008-10-27 15:06:41

இந்தியாவிலும் ஈராக்கிலும் சகிப்பற்றதன்மை மற்றும் வன்முறைக்குப் பலியாகும் கிறிஸ்தவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குமாறு திருத்தந்தை அழைப்பு


அக்.27,2008 திருத்தந்தை வழங்கிய மூவேளை செப உரையில் இந்தியாவிலும் ஈராக்கிலும் சகிப்பற்றதன்மை மற்றும் வன்முறைக்குப் பலியாகும் கிறிஸ்தவர்கள் சார்பாக குரல் கொடுத்தார்.



கீழைரீதிப் பிதாப்பிதாக்கள் இம்மான்றத்தின் நிறைவில் விடுத்த அழைப்போடு சேர்ந்து நானும் இப்பொழுது சர்வதேச சமுதாயம், சமயத்தலைவர்கள், நன்மனம் கொண்ட அனைவருக்கும் அழைப்புவிடுக்கிறேன் என்றார் திருத்தந்தை. கிழக்கின் ஒவ்வொரு நாட்டிலும் சகிப்பற்றதன்மை மற்றும் கொடூரமான வனமுறையினால் கிறிஸ்தவர்கள் கொல்லப்படுகின்றனர், அச்சுறுத்தப்படுகின்றனர், கட்டாயமாக வீடுகளைவிட்டு வெளியேறுகின்றனர். புகலிடம் தேடி அலைகின்றனர். குறிப்பாக ஈராக் மற்றும் இந்கியாவை நினைக்கின்றேன்.

RealAudioMP3 இந்த நாடுகளின் பழமையான மற்றும் உன்னத மக்கள், நூற்றாண்டுகளாக மதிப்புமிக்க நல்லிணக்க வாழ்வை வாழக் கற்றுக் கொண்டுள்ளார்கள். தங்களது தாய்நாட்டின் பொது நலனுக்காக கடினமாகவும் திறமையாகவும் உழைத்து நல்லிணக்கத்தைப் போற்றி வந்துள்ளார்கள். அவர்கள் சலுகைகளைக் கேட்கவில்லை. மாறகாக எப்பொழுதும் போல தங்களது சொந்த நாட்டில் சொந்த மக்களோடு சேர்ந்து வாழ விரும்புகிறார்கள். எனவே அந்நாடுகளின் அரசியல் மற்றும் மதத்தலைவர்கள், அம்மக்களின் சட்டரீதியான வாழ்வுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் திருத்தந்தை. மேலும், வத்திக்கான் பசிலிக்கா வளாகத்தில் கூடியிருந்த இலட்சக்கணக்கான திருப்பயணிகளிடம், அடுத்த ஆண்டு அக்டோபரில் ஆப்ரிக்காவுக்கான 2வது சிறப்பு ஆயர்கள் மாமன்றம் உரோமையில் நடைபெறும், கடவுளுக்குச் சித்தமானால் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஆப்ரிக்காவுக்குத் திருப்பயணம் செல்வேன். முதலில் காமரூன் சென்று ஆப்ரிக்க ஆயர்கள் மாமன்றத்திற்கான முன்வரைவு தொகுப்பை வழங்குவேன். பின்னர் அங்கோலா சென்று அங்கு நற்செய்தி அறிவிக்கப்பட்டதன் 500ம் ஆண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்வேன் என அறிவித்தார். இந்த ஆப்ரிக்கப் பயணம் பற்றித் திருப்பலி மறையுரையிலும் குறிப்பிட்டார் திருத்தந்தை. ஆப்ரிக்கக் கண்டத்தின் 53 நாடுகளில் 49 நாடுகளுடன் திருப்பீடம் அரசியல் உறவு வைத்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

RealAudioMP3

மேலும், இம்மூவேளை செப உரையில், 12வது உலக ஆயர்கள் மாமன்றம் நிறைவுக்கு வந்தது பற்றியும் பேசினார். .திருச்சபையின் வாழ்விலும் பணியிலும் இறைவார்த்தை என்ற தலைப்பில் நடைபெற்ற 12வது உலக ஆயர்கள் மாமன்றம் நிறைவுக்கு வந்துள்ளது. ஒவ்வோர் உலக ஆயர்கள் மாமன்றமும் ஓர் உறுதியான திருச்சபை ஐக்கியத்தின் அனுபவமாக இருக்கின்றது. எனினும் இந்த ஆயர்கள் மாமன்றம் அதிகமான அனுபவத்தைக் கொடுத்துள்ளது. ஏனெனில் திருச்சபையை ஒளிர்வித்து வழிநடத்தும் இயேசு கிறிஸ்துவாகிய கடவுளின் வார்த்தையே இதில் மையமாக வைத்து கவனம் செலுத்தப்பட்டது. இதில் கடவுளின் வார்த்தைக்கும் அது வெளிப்படுத்தப்பட்டுள்ள திருமறைநூலுக்கும் இடையேயான உறவு நோக்கப்பட்டது. விவிலியத்திற்கு ஒரு நல்ல பொருள் விளக்கம் கொடுப்பதற்கு அதன் வரலாற்றுப் பூர்வமான விளக்க முறையும் இறையியல் முறையும் தேவைப்படுகின்றன. ஏனெனில் திருமறை நூல் என்பது மனித வார்த்தைகளில் இறைவார்த்தையாகும். எனவே இதன் ஒவ்வொரு பகுதியையும் வாசிக்கும் போது திருமறைநூலின் ஐக்கியத்தையும், திருச்சபையின் வாழும் மரபையும் விசுவாச ஒளியையும் மனத்தில் இருத்த வேண்டும். எனவே இதற்கு அறிவியல் பூர்வமான விளக்கமும் செபச்சூழலில் வாசிப்பதும் இறைவனின் செய்தியைப் பெறுவதற்கு அவசியமானவை. இதைத் திருச்சபை திருமறை நூல் வழியாகக் கொடுப்பதற்கு விரும்புகிறது.

திருச்சபையின் ஆசிரியம், திருமறைநூல் ஆகியவைகளுக்குச் சரியாக விளக்கம் அளிக்கப்பட வேண்டும், இறைவார்த்தையைக் கேட்டபதற்கு திருவழிபாடு முக்கியமான இடமாகும், குருக்களுக்கு விவிலியத்தில் நன்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும், பொதுநிலையினர் மத்தியில் விவிலிய எழுச்சி உருவாக்கவேண்டியதன் அவசியம் போன்ற சில முக்கிய கூறுகளின் தேவை உலக ஆயர்கள் மாமன்றத்தில் விவாதிக்கப்பட்டது பற்றியும் திருத்தந்தை குறிப்பிட்டார்.

இறுதியில் அனைவருக்கும் தமது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

RealAudioMP3

அன்பர்களே, விவிலியத்தை நாமும் வாசித்து தியானித்து வாழ்வாலும் சொல்லாலும் அதனை அறிவிப்போம். புனித பவுலோடு சேர்ந்து நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு எனக் கூறுவோம். இறைவார்த்தை நம் பாதைக்கு விளக்கு. நம் வாழ்வுக்கு வழிகாட்டி







All the contents on this site are copyrighted ©.