2008-10-26 19:46:20

உலக ஆயர்கள் மாமன்ற முடிவில் திருத்தந்தை ஆயர்குழுவுக்கு வழங்கிய உரை. 2610.


இம்மாதம் 25 மாலை திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தில் கூடியிருந்த அனைவருக்கும் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் வாழ்த்துத் தெரிவித்தார் . அன்புள்ள சகோதர , சகோதரிகளே எனத் தொடங்கிய திருத்தந்தை உலக ஆயர்கள் மாமன்றம் முடிவுக்கு வரும் நேரம் வந்துவிட்டது . ஆனால் நம் பயணம் இறைவாக்கின் துணையோடு தொடர்கிறது . இந்த மன நிலையில் நாம் எந்நாளும் இம் மாமன்றத்திலேயே பயணம் செய்துகொண்டிருப்போம் . இங்கு ஆயர்கள் பரிமாறிய கருத்துக்கள் ஒரு பல்லிசைப் பாடலாகவே விசுவாச ரீங்காரம் தந்தது. இறைவாக்கின் அழகையும் வளமையையும் கண்டு இரசித்தோம் . ஒருவர் மற்றவர் கூறுவதைக் கேட்டுப் பயன்பெற்றிருக்கிறோம். ஒருவர் மற்றவரைக் கேட்பதால் நாம் இறைவாக்கைக் கேட்கவும் திறன் பெற்றுள்ளோம் . திருச்சட்டமும் இறைவாக்கும் இணைந்தே நம்மை வளப்படுத்துகின்றன என்கிறார் தூய பெரிய கிரகோரி . நாளும் நம் வாழ்வின் பல்வேறு கட்டங்களில் நாம் இறைவாக்கில் மறைந்துள்ள வளப்பத்தைக் கண்டுணர்கிறோம் . தியானச் சிந்தனைகளோ , அறிவியலின் மதிநுட்பமோ பெறமுடியாத செல்வங்களை நாம் அன்றாட வாழ்வில் இறைவாக்கிலிருந்து பெறுகிறோம் எனத்திருத்தந்தை கூறினார் . ஆயர்கள் மாமன்றம் உள்ளத்தைத் தொட்டதாகத் திருத்தந்தை மேலும் கூறினார் . இறைவாக்கைக் கேட்டு வாழ்வில் அதன் வழி நடக்க நாம் உறுதிகொண்டிருக்கிறோம். அது நமக்கு விடுதலை அளிக்கிறது . ஆயர்கள் மாமன்றத்துக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி கூறினார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் . சிலர் இரவில் கண்விழித்தும் , ஞாயிறு தினங்களிலும்கூடப் பணிசெய்தும் தங்கள் ஓய்வை மாமன்றத்துக்காகச் செலவிட்டுள்ளார்கள் . இந்நிலையை அடுத்து வரும் மாமன்றங்களில் தவிர்க்கப் பார்ப்போம் என்றார் திருத்தந்தை .அன்று சுவையான நண்பகல் உணவை வழங்கியவர்களுக்கும் திருத்தந்தை தமது நன்றியைத் தெரிவித்தார் . ஆயர்கள் மாமன்றத்தில் பகிர்ந்துகொண்ட கருத்துக்களை திரட்டி வெளியிடும் பணி காத்திருக்கிறது . ஒருவர் மற்றவருடைய கருத்துக்களை நாம் தொடர்ந்து படித்துப் பயன் பெறுவதால் நம் மாமன்றம் தொடர்கின்றது எனக் கூறினார் திருத்தந்தை. இந்தக் கலந்துரையாடல் வழியாக நாம் மற்றவர் திருநூலைப் பற்றிக்கூறும் வளமான கருத்துக்களைப் பெறுகிறோம் எனக் கூறி ,மாமன்றத்துக்கு வந்திருந்தோரின் வழிப்பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கூறி பிரியாவிடை பெற்றுக்கொண்டார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .








All the contents on this site are copyrighted ©.