2008-10-25 15:32:45

கீழைநாடுகளில் நீதிக்கும் சமய சுதந்திரத்துக்கும் உலக ஆயர்கள் மாமன்றப் தந்தையர்கள் அழைப்பு


அக்.25,2008. அமைதிக்கு நீதியும் சமய சுதந்திரமும் இன்றியமையாதவை என்று இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் கத்தோலிக்கத் தலைவர்கள் கூறினர்.

12வது உலக ஆயர்கள் மாமன்றத்தில் பங்கு பெறும் இந்நாடுகளின் தந்தையர்கள், துன்புறுவோரை இறைவன் பாதுகாக்குமாறு செபித்தனர். அதேசமயம் சுதந்திரம், உண்மை, அன்பு ஆகியவற்றில் அமைதிக்காக உழைக்குமாறு நன்மனம் கொண்ட மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்தனர்.

10 கீழைரீதி கத்தோலிக்கத் திருச்சபைகள், எருசலேம் இலத்தீன் ரீதி பிதாப்பிதா, திருப்பீடச் செயலர், திருப்பீட கீழைரீதி பேராயத் தலைவர், உலக ஆயர்கள் மாமன்றப் பொதுச் செயலர், இந்தப் 12வது உலக ஆயர்கள் மாமன்றத் தலைவர் பிரதிநிதிகள் எனப் பலர் கையெழுத்திட்டு இணைந்து நேற்று வெளியிட்ட அறிக்கையில், இந்தியா, புனிதபூமி, லெபனன், ஈராக், ஈரான் ஆகிய நாடுகளில் துன்புறும் கிறிஸ்தவர்கல் குறித்த தங்கள் கவலையைத் தெரிவித்துள்ளனர்.

இந்நாடுகளில் சமய சுதந்திரத்துக்கு உறுதி வழங்கும் நீதியுடன்கூடிய அமைதிக்கும் இக்கத்தோலிக்கத் தலைவர்கள் அழைப்பு விடுத்தனர். அத்துடன், அரசியல்வாதிகளும் அரசுத் தலைவர்களும் அனைத்து மக்களுக்கும் சமய சுதந்திரத்துக்கு உறுதி வழங்கவும், சமய காரணங்களுக்காக தங்கள் வீடுகளைவிட்டு கட்டாயமாக வெளியேறும் மக்களுக்கு உதவவும், குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் கேட்டுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.