2008-10-22 19:31:40

மத்திய கிழக்குத் திருச்சபையின் தலைவர்களைப் பேராயர் கெல்லி சந்தித்தார்.

22 அக். 08 .


இம்மாதம் 21 மாலையில் பேராயர் பாட்ரிக் கெல்லி மத்திய கிழக்குத் திருச்சபையினரின் மறைபரப்புப் பணி குறித்தும் அங்கு அவர்களுடைய பிரசன்னம் குறித்தும் அவர்களைப் பெருமைப்படுத்த உரோமையில் விருந்து அளித்துப் பாராட்டினார் . உரோமையில் உள்ள புகழ் மிக்க ஆங்கிலக் கல்லூரியில் அகில உலக ஆயர்கள் மாமன்றத்துக்கு வருகை தந்துள்ள மத்திய கிழக்கு நாடுகளின் ஆயர்களும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளின் கத்தோலிக்க ஆயர்களும் புனித பூமி மற்றும் லெபனான் , ஈராக்கு , ஈரான் நாட்டு ஆயர்களும் ஒன்றுகூடி தங்கள் உறவுகளைக் கொண்டாடி மகிழ்ந்தனர் . வந்திருந்தவர்களில் பாபிலோனின் பிதாப்பிதா 3 ஆவது எம்மானுவேல் கர்தினால் தெல்லி , எருசலேத்தின் இலத்தீன் பிதாப்பிதா மேதகு போவாட் டிவால் , டெஹ்ரானின் கல்தேயப் பேராயர் மேதகு இரம்ஸி கார்மோ மற்றும் ஆயர் வில்லியம் கென்னி ,ஆயர் தாவீது மக்கோ மற்றும் ஆங்கிலக் கல்லூரியின் மாணவர்களும் மேதகு நிக்கோலாஸ் ஹட்ஸன் தலைமையில் கலந்து கொண்டனர் . பேராயர் கெல்லி பேசியபோது மத்திய கிழக்கு நாடுகளில் கிறிஸ்தவக் குழுமங்கள் படும் துயரங்கள் முக்கியமாக மோசூலில் நடந்துவரும் வன்முறைகள் நெருக்கடி நிலையை உருவாக்கியுள்ளன . இம்மாலை வேளையில் நாங்கள் உயிருள்ள கற்களாகிய உங்களுக்காக இறைவனுக்கு நன்றி கூறி , உங்கள் அறிமுகத்தில் மகிழ்ச்சியடைந்து , உங்கள் பயணத்தில் உடன் வருவோம் என உறுதி கூறுகிறோம் எனக் கூறினார் . இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டு ஆயர்கள் குழு மத்திய கிழக்கு நாடுகளின் திருச்சபையோடு ஒன்றிணைந்து செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.