2008-10-19 19:56:37

கிறிஸ்தவ ஒன்றிப்புப் பிதாப்பிதா உலக ஆயர்கள் மாமன்றத்தில் கலந்துகொண்ட வாய்ப்புக்கு மகிழ்ச்சி தெரிவிக்கிறார் . 19 அக். 08 .


முதல் முறையாக ஒரு கிறிஸ்தவ ஒன்றிப்புப் பிதாப்பிதா கத்தோலிக்க உலக ஆயர்கள் மாமன்றத்தில் கருத்துப் பரிமாறும் பேறு பெற்றிருக்கிறார் . கான்ஸ்டாண்டி நோபிளின் எக்யுமெனிக்கல் – கிறிஸ்தவ சமய ஒன்றிப்புப் பிதாப்பிதா முதலாம் பர்த்தலோமேயு திருத்தந்தையின் அரண்மனையிலுள்ள அழகுமிக்க சிஸ்டைன் ஆலயத்தில் உலக மாமன்ற ஆயர்களுக்கு 18 அக்டோபர் சனிக்கிழமை மாலை வழிபாட்டின்போது உரை நிகழ்த்தினார் . அது பற்றிப் பேசிய பிதாப்பிதா முதலாம் பர்த்தலோமேயு வரலாற்றில் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சி இது என மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்தார் . அன்றைய வருகை இரு கிறிஸ்தவ சமயங்களையும் இணைக்க வழிவகுக்கும் எனக் கூறினார் . இரு சமயங்களிடையே நிலவும் சிறு சிறு கருத்து வேறுபாடுகளை மறந்து உரோமையின் தலைமையில் திருச்சபைகள் ஒன்றுபடும் காலம் கனிந்து வருவதாகப் பிதாப்பிதா கூறினார் . செயல்திட்ட முறையில் திருச்சபைகள் இணைந்து ஏழ்மையை நீக்கி , சம தர்ம உலகை உருவாக்கி , தீவிரவாதத் தன்மைகளையும் இனப்பாகுபாடுகளையும் களைந்து , போரிடும் உலகில் சமய ஒன்றிப்பை உருவாக்கிடப் பரிந்துரைத்தார் பிதாப்பிதா . உங்கள் தந்தையர்கள் எங்கள் தந்தையர்கள் , எங்கள் தந்தையர் உங்கள் தந்தையர் என்றால் நீங்களும் நாங்களும் சகோதரர்கள்தானே எனத் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் கேள்வியைத் தொடுத்தார் . ஒரே மாதிரியான இருக்கைகளில் அமர்ந்திருந்த அவர்கள் இருவருக்கும் பின் புறமும் மிக்கேல் ஆஞ்சலோவின் இறுதித் தீர்ப்புநாள் ஓவியம் வரையப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது .








All the contents on this site are copyrighted ©.