2008-10-17 08:48:18

அக்டோபர் 17 – அந்தியோக்கியா நகர் புனித இஞ்ஞாசியார்


வரலாற்றில் அக்டோபர் 17 – கி.பி.45ஆம் ஆண்டில் சிரியாவில் பிறந்த இஞ்ஞாசி, நற்செய்தியாளர் யோவானின் சீடர் மற்றும் அந்தியோக்கியா நகரின் மூன்றாவது ஆயருமாவார். கி.பி. 94 முதல் 96ம் ஆண்டு வரை பேரரசன் தொமிசியன் இரண்டாம் முறையாகக் கிறிஸ்தவர்களைப் பெருமளவாக நசுக்கித் துன்புறுத்திய போது அனைவரையும் விசுவாசத்தில் உறுதிப்படுத்தினார். அவன் மீண்டும் 98 முதல் 117 ம் ஆண்டு வரை கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தினான். அச்சமயம் ஆயர் இஞ்ஞாசியார் கைது செய்யப்பட்டு உரோமையில் கொலோசேயத்தில் பசித்திருக்கும் சிங்கங்களுக்கு அவரை இரையாகப் போடுவதற்கு ஆணை பிறப்பித்தான். அதனைத் தடுக்க விரும்பிய உரோமைக் கிறிஸ்தவர்களிடம், ஆயர் இஞ்ஞாசியார் எனக்காகக் காத்துக் கொண்டிருக்கும் வனவிலங்குகள் என்னிடமுள்ள சிறு எலும்பைக்கூட விடாது தின்று எனக்குக் கல்லறை கட்டட்டும், நெருப்பா, சிலுவை மரமா எனது உடல் முழுவதும் நொறுக்கப்டும் நிலையா, ஆண்டவரிடம் போவதற்கு இவை உதவியாக இருக்குமாயின் இதனை நான் அன்புடன் ஏற்றுக் கொள்கிறேன் என்றார். குருக்கள் ஆயர்களுக்கு எப்பொழுதும் பணிந்து நடக்கத் தூண்டினார். எபேசு, மக்னெசியா, த்ராலெஸ் எனப் பல்வேறு திருச்சபைகளுக்கு ஏழு சுற்று மடல்களை எழுதினார். இவை மூலம் அவரது புகழ் ஓங்கியது. சாவு நெருங்கிய போது தான் கிறிஸ்துவின் கோதுமை என்றார். கி.பி.107ஆம் ஆண்டில் இரண்டு கொடிய சிங்களுக்கு இரையாகப் போடப்பட்டார் ஆயர் இஞ்ஞாசியார்.

சிந்தனைக்கு – ஒளியை நோக்கி உன் முகத்தைத் திருப்பிக் கொள். இருள் உன்னைச் சூழ்ந்து வெல்ல முடியாது.








All the contents on this site are copyrighted ©.