2008-10-15 13:56:17

இறையியலும் மறைநூலும் கைகோர்த்துச் செல்ல வேண்டும் – திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வலியுறுத்தல்


அக்.15,2008. திருமறை நூலுக்கு விளக்கம் தரும் முறைகளோடு இறையியலும் மறைநூலும் கைகோர்த்துச் செல்ல வேண்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

இம்மாதம் 5ம் தேதி தொடங்கிய விவிலியம் பற்றிய உலக ஆயர்கள் மாமன்றத்தில் நேற்று முதன்முறையாக உரையாற்றிய திருத்தந்தை, தான் எழுதி வரும் நாசரேத்தூர் இயேசு பற்றிய புத்தகத்தின் இரண்டாவது தொகுப்பின் அடிப்படையில் கருத்துக்களை வெளியிடுவதாகத் தெரிவித்தார்.

திருமறை நூலுக்கு விளக்கம் இறையியலுக்கு இணைந்ததாய் இல்லாத போது, அல்லது திருமறை நூல் இறையியலின் மையமாக இல்லாத போது அல்லது இறையியல் திருமறை நூலில் மையம் கொண்டிராத போது திருமறை நூலுக்கு விளக்கம் சொல்லப்படும் முறைகளில் பிரச்சனைகள் ஏற்படும் என்றார் திருத்தந்தை.

எந்த ஆவியானவரால் திருமறை நூல் எழுதப்பட்டதோ அதே ஆவியானவரின் துணைகொண்டு அதை நாம் படிக்கவும் அதற்குப் பொருள் விளக்கம் செய்யவும் வேண்டும், அத்தோடுகூட திருச்சபை முழுவதன் உயிருள்ள மரபும் விசுவாச உண்மைகளுக்கிடையேயான ஒப்புமையும் கவனிக்கப்பட வேண்டும் என்று இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் இறைவெளிப்பாடு பற்றிய கொள்கைத்திரட்டு கூறுகிறது என்றும் திருத்தந்தை எடுத்துச் சொன்னார்.

இந்தக் கொள்கைகளைப் புறக்கணிக்கும் போது விவிலியம் கடந்தகால ஒரு புத்தகமாக மட்டுமே நோக்கப்படும் என்றும், திருமறை நூலுக்கு விளக்கம் தரும் முறை வரலாற்றுயியலாகவும் இருக்கும் என்றும் அவர் கூறினார்.

இந்த ஒரு கண்ணோட்டத்தில் வரலாற்றில் இறைவனது இருப்பு மறைந்து விடும் என்று அவர் மேலும் கூறினார்.

எனவே திருச்சபையின் பணியிலும் வாழ்விலும் திருமறை நூலுக்கு விளக்கம் தரும் முறைக்கும் இறையியலுக்கும் இடையேயான இருவேறான கூறுகள் நீக்கப்படுவதற்கு முயற்சிகள் எடுக்கப்படுமாறு திருத்தந்தை கேட்டுக் கொண்டார்.








All the contents on this site are copyrighted ©.