2008-10-14 16:23:28

இசை, உணர்வுகளுக்கும் செவிகளுக்கும் இனிமையான நாதத்தைக் கொண்டு வருகிறது - திருத்தந்தை


அக்14,2008. இசை, உணர்வுகளுக்கும் செவிகளுக்கும் இனிமையான நாதத்தைக் கொண்டு வருகிறது என்று, நேற்றுமாலை புனித பவுல் பசிலிக்காவில் நடத்தப்பட்ட இசைக் கச்சேரியில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

புனித பவுல் ஆண்டை முன்னிட்டு திருத்தந்தையை கவுரவிக்கும் விதமாக வியன்னா பில்ஹார்மோனிக் இசைக்குழு இந்த இசைக் கச்சேரியை நடத்தியது. இதில் பேரவைத் தந்தையர்களும் பங்கு கொண்டனர்.

கிறிஸ்டோப் எஷ்ஷென்பாக் என்பவரால் நடத்தப்பட்ட இதில் சிறிய உரை ஒன்றும் நிகழ்த்திய திருத்தந்தை, இது அன்டன் புருக்நர்ஸின் சிம்பனி இசையை மிகச் சிறந்த விதத்தில் விளக்கியதாக இருந்தது என்றார்.

இவ்விசையைக் கேட்டபொழுது, புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமடலின் ஒருபகுதியை நினைவுபடுத்தியது என்ற திருத்தந்தை, அதில் அருள் கொடைகளின் பல்வகை தன்மைகள் மற்றும் ஒருமைத்தன்மை பற்றிக் குறிப்பிட்டிருப்பது பற்றிப் பேசினார்.

திருச்சபையை மனித உடலுக்கு ஒப்பிட்டு அதில் பல்வேறு உறுப்பினர்கள் இருந்தாலும் எல்லாரும் ஒரே நோக்குடன் செயல்படுவதையும் குறிப்பிட்டார் அவர்.








All the contents on this site are copyrighted ©.