2008-10-07 15:50:20

மதத்திற்கான தாகம் ஆசியாவில் இன்னும் இருக்கின்றது – பேராயர் மெனாம்பரம்பில்


அக்.07,2008. நேற்று மாலை தொடங்கிய 12வது உலக ஆயர் மாமன்றத்தின் இரண்டாவது பொது அமர்வில் ஆசியத் திருச்சபை பற்றிய அறிக்கையை சமர்ப்பித்த இந்தியாவின் குவாகாத்தி பேராயர் தாமஸ் மெனாம்பரம்பில், மதத்திற்கான தாகம் ஆசியாவில் இன்னும் இருக்கின்றது என்றார்.

திருத்தந்தை 16ம் பெனடிக்டின் முன்னிலையில் தொடங்கிய இவ்வமர்வில் உரையாற்றிய பேராயர் மெனாம்பரம்பில், ஆசிய மக்களின் இத்தாகம் கிழக்குக் கண்டத்திற்கு மட்டுமல்ல, முழு மனித சமுதாயத்திற்குமே முதலீடாக உள்ளது என்றார்.

ஆசிய சமூகங்களில் அரசியல் இயக்கங்களைவிட சமய இயக்கங்கள் ஆழமாக வேரூன்றியவை என்றும், தங்கள் மதத்தை மாற்ற விரும்பாதவர்கள்கூட மிக ஆழமான ஆன்மீகத்தில் வளர ஆவல் கொண்டுள்ளார்கள் என்றும் உரைத்த அவர், ஆசியர்கள் கடவுளின் வார்த்தைக்குத் திறந்த மனதாய் உள்ளார்கள், விவிலியச் சிந்தனைகள் தனிப்பட்டவர்களின் வாழ்வைத் தொட்டு வருகின்றன, குழுவின் மதிப்பீடுகளைப் பாதிக்கின்றன, உறவுகளில் மாற்றம் கொணர்கின்றன, தத்துவ சிந்தனைகளை திருத்துகின்றன, நல்லதொரு சமூக வாழ்வுக்கான திட்டங்களைச் செம்மைப்படுத்துகின்றன என்றார்.

மனிதன அப்பத்தினால் மட்டுமல்ல, கடவுளின் வாயினின்று வரும் வார்த்தையால் உயிர் வாழ்கிறான் என்பதை ஆசியர்கள் நன்றாகவே அறிந்திருக்கிறார்கள் என்றும் குவாகாத்தி பேராயர் கூறினார்.

வார்த்தையாம் இயேசு பிறந்த ஆசியாவிலிருந்தே அவரின் மீட்பளிக்கும் செய்தி உலகின் எல்லாப் பாகங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டது என்றும் உரைத்த அவர், பவுல் மேற்குக்கும், பேதுரு உரோமைக்கும், யாக்கோபு ஸ்பெயினுக்கும், மாற்கு அலெக்சாந்திரியாவுக்கும், தோமாயார் இந்தியாவுக்கும், இரேனியுஸ் லியோனுக்கும், மற்றவர்கள் உலகின் இறுதிவரை சென்றார்கள் என்றார்.

உரோமைப் பேரரசில் கிறிஸ்தவம் அரசு மதமாக அறிவிக்கப்பட்ட பின்னர் கிறிஸ்தவத்திற்கெதிராய் இடம் பெற்ற நடவடிக்கைகள் பற்றியும், புனிதர்கள் சவேரியார், அருளானந்தர், இராபர்ட் தெ நொபிலி போன்ற மேற்கத்திய மறைபோதகர்கள் ஆசியாவில் ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றியும் விளக்கிய அவர், தற்போது ஆசிய கிறிஸ்தவர்கள் அவர்களது பணிகளைத் தொடர்ந்து செய்கின்றார்கள் என்றார்.

கிறிஸ்தவத்தின் தொடக்க காலத்திலிருந்தே கிறிஸ்தவ நற்செய்தியாளர்கள் தாங்கள் போதித்ததை வாழ்ந்தார்கள், இதற்கு அன்னை தெரேசா ஓர் எடுத்துக்காட்டு என்றும் உரைத்த குவாகாத்தி பேராயர் மெனாம்பரம்பில், ஆசியாவில் பல முறைகளில் நற்செய்தி அறிவிக்கப்படுகின்றது என்று குறிப்பிட்டு அவை பற்றியும் எடுத்துச் சொன்னார்.

இளம் வயதுவந்தோர் விவிலியத்தை நன்கு படித்து அது பற்றிய அறிவில் ஆழப்பட விரும்புகின்றனர், விவிலியச் செய்தியை பிறரோடு பகிர்ந்து கொள்ளவும் விரும்புகின்றனர், ஆசியாவில் 65 விழுக்காட்டினர் இளையோர் என்பது கவனிக்கத்தக்கது என்று பேராயர் மெனாம்பரம்பில் 12வது உலக ஆயர் மாமன்றத்தில் அறிவித்தார்.

 








All the contents on this site are copyrighted ©.