2008-10-07 15:48:51

இக்காலத்திய சிந்தனையில் கடவுள் பற்றிய உருவம் இழக்கப்படுகின்றது - சிகாகோ கர்தினால்


அக்.07,2008. 12வது உலக ஆயர் மாமன்றத்தின் மூன்றாவது பொது அமர்வு இன்று காலை திருத்தந்தை 16ம் பெனடிக்டின் முன்னிலையில் கர்தினால் ஜாரஜ் பெல்லின் தலைமையில் தொடங்கியது.

இவ்வமர்வில் உரையாற்றிய சிகாகோ கர்தினால் பிரான்சிஸ் ஜார்ஜ், திருச்சபையில் இறைவார்த்தை பற்றி பேசுவது என்பது, விசுவாசிகளின் வாழ்வில் இறைவார்த்தை பற்றி பேசுவதாகும், மேய்ப்பர்கள் தாங்கள் இறைவார்த்தையை எடுத்துரைக்கும் மக்களின் அறிவு, கற்பனை, விருப்பம் ஆகியவற்றின் மாற்றத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

இக்காலத்திய சிந்தனையில் கடவுள் பற்றிய உருவம் இழக்கப்படுகின்றது, இக்காலத்திய அறிவாளர்கள் விவிலிய புத்தகத்தில் குறைந்த அளவே உடன்பாடு கொள்கிறார்கள் என்றரைத்த அவர், மறைநூலிலுள்ள கடவுளின் வார்த்தை, திருச்சபையின் வாழ்விலும் பணியிலும் உணரப்பட வேண்டுமானால் மேய்ப்பர்கள் இறைவார்த்தைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றார்.

இன்னும் இவ்வமர்வில் உரையாற்றிய பேராயர் காம்ப்பெல், இயேசு இறைவார்த்தையை எவ்வாறு போதித்தார் என்பதைக் கருத்தில் கொண்டு, இந்த அன்பின் கடிதத்தை விசுவாசிகள் கேட்டு அனுபவிக்க வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றார்.

இன்று காலை அமர்வில் உரையாற்றிய பேராயர் கிகானாஸ், இக்காலத்தில் நமது போதனை அதன் சாரத்தை இழந்து வருகின்றது, செவிடன் காதில் ஊதிய சங்காக மாறி வருகின்றது, எனவே திருப்பலியில் போதிப்பதற்கான பொறுப்பைக் கொண்டுள்ள ஆயர்கள், தியாக்கோன்கள், குருக்கள் ஆகிய அனைவரும் இறைவார்த்தையை பயனுள்ள விதத்தில் அறிவிப்பதற்கான வழிகளைக் காணுமாறு கேட்டுக் கொண்டார்.



 








All the contents on this site are copyrighted ©.