2008-10-06 15:46:42

உலகின் நிதி நெருக்கடி பணத்தின் பயனற்ற தன்மையைக் காட்டுகின்றது திருத்தந்தை 16ம் பெனடிக்ட்


அக்.06,2008. கடவுள் மீதான விசுவாசம் மட்டுமே, வாழ்வு முழுவதும் அனுபவிக்கும் செல்வத்தைப் பின்னுக்குத் தள்ளி வெற்றியைத் தரக்கூடியது என்பதை உலக அளவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காட்டுகின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

இன்று காலை வத்திக்கானில் தொடங்கிய 12வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் முதல் பொது அமர்வில் பேசிய திருத்தந்தை, பணம் மற்றும் பேராசையின் பயனற்ற தன்மையை உலக அளவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காட்டுகின்றது என்றார்.

பெரிய வங்கிகள் வீழ்ச்சியடைந்ததுடன் பணம் காணாமல் போய்விட்டது, நிஜம் என்று உலகில் தெரிந்த அனைத்தும் இரண்டாம் தரமாக மாறிவிட்டன என்றுரைத்த அவர், வெற்றி, பணம், பதவி போன்றவற்றின் மீது தங்கள் வாழ்க்கையை கட்டுபவர்கள் இதனை மனத்தில் பதிக்குமாறு வலியுறுத்தினார்.

உலகின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் கலந்து கொள்ளும் 253 பேரவைத் தந்தையரிடம் இவ்வாறு கூறிய திருத்தந்தை, கடவுளின் வார்த்தை மட்டுமே உலகில் உறுதியானதொன்றாகும் என்றார்.

மண்மீது அல்லது பாறை மீது கட்டப்படும் வீடு பற்றிய நற்செய்திப் பகுதியின் அடிப்படையில் பேசிய அவர், கடவுளின் வார்த்தையைப் பறக்கணித்து உலக செல்வங்களின் மீது வாழ்க்கையைக் கட்டுவோர் மண்மீது கட்டப்படும் வீட்டுக்கு ஒப்பானவர்கள், மாறாக விசுவாசம் என்னும் உறுதியான அடித்தளத்தின் மீது வாழவை அமைப்பவர்கள் பாறை மீது வீடு கட்டியவர்கள் ஆவார்கள் என்றார்.








All the contents on this site are copyrighted ©.