2008-10-05 13:57:44

12வது உலக ஆயர் மாமன்றத் தொடக்கத் திருப்பலி


அக்.05,2008. அன்பர்களே, உலக ஆயர்களின் மாமன்றம் அல்லது உலக ஆயர்களின் பேரவை என்பது மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை வத்திக்கானில் நடத்தப்படும் கூட்டமாகும். இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம் நடைபெற்ற போது திருச்சபையின் முக்கிய பிரச்சனைகளைக் களைவதற்கென உலக ஆயர்கள் மாமன்றம் நடத்தப்படுவதற்கு முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான ஆணையை திருத்தந்தை ஆறாம் பவுல் 1965ஆம் ஆண்டில் வழங்கினார். இந்த உலக ஆயர்களின் மாமன்றத்தில் ஒவ்வொரு நாட்டின் ஆயர் பேரவையின் பிரதிநிதிகள், திருத்தந்தையால் நியமிக்கப்படும் பிரதிநிதிகள், இருபால் துறவு சபைகளின் அதிபர்கள் அவையின் பிரதிநிதிகள், பொதுநிலை விசுவாசிகளின் பிரதிநிதிகள், பிற கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொள்கின்றனர். இதுவரை திருச்சபையில் 11 உலக ஆயர்களின் மாமன்றங்கள் நடந்திருக்கின்றன. கடைசியாக 2005 ஆம் ஆண்டில், திருச்சபையின் வாழ்விலும் பணியிலும் திருநற்கருணை என்ற தலைப்பில் 11வது உலக ஆயர்களின் மாமன்றம் நடைபெற்றது. அக்.5, இஞ்ஞாயிறன்று தொடங்கியுள்ள 12வது உலக ஆயர்களின் மாமன்றம், திருச்சபையின் வாழ்விலும் பணியிலும் இறைவார்த்தை என்ற தலைப்பில் அக் 26 வரை நடைபெறும். இந்த 12வது மாமன்றத்தை இஞ்ஞாயிறு உள்ளூர் நேரம் காலை 9.30 மணிக்கு உரோம் புனித பவுல் பசிலிக்காவில் பேரவைத் தந்தையர்களுடன் கூட்டுத் திருப்பலி நிகழ்த்தி தொடங்கி வைத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

இத்திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை, இஞ்ஞாயிறு திருப்பலி வாசகங்களை குறிப்பாக முதல் மற்றும் மூன்றாம் வாசகங்களை மையமாக வைத்து தமது சிந்தனைகளை வழங்கினார். இவ்விரு வாசகங்களுமே திராட்சைத் தோட்டத்தை உருவகமாகக் கொண்டு அமைந்துள்ளன. திராட்சைத் தோட்ட உருவகமானது, கடவுளின் மீட்புத் திட்டத்தை விளக்குகின்றது. பழம் பறிக்கும் காலம் நெருங்கி வந்த போது தமக்குச் சேர வேண்டிய பழங்களைப் பெற்று வரும்படி உரிமையாளர் அனுப்பிய அவரது மகன் உட்பட அனைவரையும் தோட்டத் தொழிலாளர்கள் கொன்று போட்டனர். இங்கு சமூக நீதி மீறப்படுவதைக் காண்கிறோம். இது இறைவனது திட்டத்தை மீறுவதாகவும் இறைவனைப் பறக்கணிப்பதாகவும் இருக்கின்றது. திருச்சபை வரலாற்றிலும் நற்செய்தியை முதலில் அறிவித்தவர்கள் காணாமல் போய்விட்டனர். இன்று வரலாற்று புத்தகத்தில் அவர்கள் பெயர்கள் நினைவுகூரப்படுகின்றன. இன்றைய நமது காலத்திலும் இதேபோல் நடப்பதில்லையா. ஒருகாலத்தில் விசுவாசத்திலும் இறையழைப்பிலும் செழிப்பாக விளங்கிய நாடுகள், இன்றைய நவீனக் கலாச்சாரத்தின் பிடியின் கீழ் தங்களது தனித்துவத்தை இழந்து வருகின்றன. கடவுளைத் தனது வாழ்விலிருந்து வெளியேற்றும் மனிதன் உண்மையிலேயே மகிழ்ச்சியாக, சுதந்திரமாக இருக்கிறானா. இல்லை. இத்தகைய மனிதன் இறுதியில் தனிமையையும், சமுதாயம் பிரிவினையையும் குழப்பத்தையும் கண்டடைகின்றது. எனினும் இயேசுவின் இந்த நற்செய்தி வார்த்தையில் திராட்சைத் தோட்டம் அழிக்கப்படாது என்ற உறுதிப்பாடு இருக்கின்றது. அந்தத் திராட்சைத் தோட்ட உரிமையாளர் அதனை விசுவாசமற்றவர்களிடமிருந்து பறித்து விசுவாசமுள்ள பிற ஊழியர்களிடம் கொடுத்தார். ஒழுக்க மற்றும் ஆன்மீகக் கூறுகளைக் கொண்ட திராட்சைத் தோட்ட உருவகம் இயேசுவின் இறுதி இரவு உணவுப் போதனையிலும் இடம் பெற்றது. உண்மையான திராட்சைச் செடி நானே. என் தந்தையே அதை நட்டு வளர்ப்பவர். என்னிடமுள்ள கனி கொடாத கொடிகள் அனைத்தையும் அவர் தரித்து விடுவார். கனிதரும் அனைத்துக் கொடிகளையும் மிகுந்த கனிதருமாறு கழித்துவிடுவார் என்றார். இந்த விவிலியப் பகுதி, தீமையும் மரணமும் இறுதியல்ல, மாறாக கடைசியில் எப்பொழுதும் வெல்பவர் கிறிஸ்துவே என்ற ஆறுதலை அளிக்கின்றது. திருச்சபையும் இந்நற்செய்தியை அறிவிப்பதில் சோர்வடைவதில்லை. இந்த பசிலிக்கா அர்ப்பணிக்கப்பட்டுள்ள பிற இனத்தாரின் அப்போஸ்தலராகிய புனித பவுலும் ஆசிய மைனர் மற்றும் ஐரோப்பாவின் பெரும் பகுதியில் நற்செய்தி அறிவித்தவர். இந்நற்செய்தி அறிவிப்புப் பணியை திருச்சபையின் வாழ்விலும் பணியிலும் இறைவார்த்தை என்ற தலைப்பில் நடைபெறும் இந்த 12வது உலக ஆயர் மாமன்றம் முழுவதும் சிறப்பான விதத்தில் புதுப்பிப்போம் என்றார் திருத்தந்தை.

RealAudioMP3

மேலும் மறையுரையைத் தொடர்ந்தார் திருத்தந்தை. இறைவன் பேசும் பொழுது எப்பொழுதும் ஒரு வேகமான பதிலை எதிர்பார்க்கிறார். அவர் தமது மீட்புத்திட்டத்திற்கு மனிதனின் ஒத்துழைப்பை கேட்கின்றார். இறைவனின் வார்த்தை மட்டுமே மனித இதயத்தின் ஆழத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது. எனவே இது தனியொரு விசுவாசியிலும் சமூகத்திலும் உள்ளூர வேரூன்ற வேண்டியது முக்கியமானது. இந்த உலக ஆயர் மாமன்றம் இதில் கவனம் செலுத்தும். மறைநூலை அறியாதிருப்பது கிறிஸ்துவையே அறியாதிருப்பதாகும். மறைநூலை புறக்கணிப்பது கிறிஸ்துவையே புறக்கணிப்பதாகும் என்று புனித எரோனிமுஸ் சொன்னார். நற்செய்தியை அறிவிக்காவிடில் எனக்கு ஐயோ கேடு என்ற பிற இனஅப்போஸ்தலரின் வார்த்தைகள் இந்தப புனித பவுல் ஆண்டில் சிறப்பு உந்துதலுடன் ஒலிப்பதைக் கேட்கிறோம். ஆயர் மாமன்றப் பெருமக்களே, இக்காலத்தில் நற்செய்தி இன்னும் சாரமுடன் அறிவிக்கப்படுவதற்கு ஆயர் மாமன்றம் இடம் பெறும் வரும் வாரங்களில் நம்மைத் தூண்டுமாறு ஆண்டவரிடம் மன்றாடுவோம். மறைநூலை வாசித்து தியானித்து அதில் பக்குவப்பட அன்னைமரி நமக்கு உதவுவாளாக. புனிதர்கள், குறிப்பாக புனித பவுல் இந்நாட்களில் நமக்கு உதவுவார்களாக.

இவ்வாறு மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.