2008-10-04 12:27:30

ஒரிசா மாநில அரசு எதையும் செய்ய இயலாமல் இல்லை, மாறாக செய்வதற்கு விருப்பம் இல்லாமல் இருக்கின்றது - பெர்காம்பூர் ஆயர்


அக்.04,2008. ஒரிசா மாநில அரசு குற்றவாளிகளுக்கு எதிராக வேண்டுமென்றே நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, வன்முறைகள் தொடர்ந்து இடம் பெற தைரியம் வழங்குவதாக உள்ளது என்று பெர்காம்பூர் ஆயர் சாரட் சந்திர நாயக் குற்றம் சாட்டியுள்ளார்.

மாநில அரசு எதையும் செய்ய இயலாமல் இல்லை, மாறாக செய்வதற்கு விருப்பம் இல்லாமல் இருக்கின்றது, இதனால் குற்றவாளிகள் தைரியம் அடைந்து கிராமம் கிராமமகாச் செல்கிறார்கள் என்றும் ஆயர் நாயக் கூறினார்.

வன்முறையால் அதிகம் பாதிக்கப்பட்ட கந்தமால் மாவட்டத்திற்கு அருகாமையில் இருக்கும் பெர்காம்பூர் மறைமாவட்ட ஆயரான இவர் கூறுகையில், வன்முறையை ஒடுக்குவதற்கு அரசு உப இராணுவப் படைகளை அனுப்பியது, எனினும் மாநில காவல்துறை மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இப்படைகளை அனுப்பத் தவறிவிட்டது என்றார்.

கந்தமால் மாவட்டத்தில் அக்டோபர் ஒன்றாந் தேதியிலிருந்து வன்முறைகள் மீண்டும் வெடித்துள்ளன.

இன்னும், ஒரிசாவிலும் பிற மாநிலங்களிலும் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மத்திய பிரதேச கிறிஸ்தவர்கள் இரத்த தானம் செய்துள்ளனர்.

அமைதியை விரும்பும் ஆயிரக்கணக்கான மக்களுடன் சேர்ந்து மனிதச் சங்கிலி மற்றும்

செபக் கூட்டம் நடத்திய மத்திய பிரதேச கிறிஸ்தவர்கள் அமைப்பு இரத்த தானம் செய்து தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.