2008-10-01 15:18:00

அரசியலுக்கு கிறிஸ்தவம் தேவைப்படுகின்றது – கர்தினால் பெர்த்தோனே


அக்.01,2008. கடவுளை ஒதுக்கி வைப்பதன் மூலம் அரசியலானது சட்டங்களை மதிப்பதற்கும் பொது நலனை அங்கீகரிப்பதற்குமான வலிமையை இழக்கத் தொடங்குகிறது என்று திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே கூறினார்.

நம்பிக்கைகளின் நூற்றாண்டு என்ற தலைப்பில் உரோமையில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய கர்தினால் பெர்த்தோனே, அரசியல் வாழ்விற்கு கிறிஸ்தவம் அவசியம் என்பதால் விசுவாசிகள் பொதுவெளி நிகழ்வுகளில் பங்கேற்பது என்பது சட்டரீதியானதே என்றார்.

உலகமயமாக்கல் இடம் பெற்று வரும் இக்காலக்கட்டத்தில் அரசியலும் சந்தைப்பொருளாதாரமும் மட்டுமே அனைத்தும் என எவரும் எண்ணி விடக்கூடாது என்ற கர்தினால் பெர்த்தோனே, உண்மையான மதிப்பீடுகளை எடுத்துரைக்க விரும்பும் அரசியலானது, முதலில் இம்மதிப்பீடுகளை இறைவனுடன் இணைந்திருக்கும் உறவுப்பாலத்தை மதிக்க வேண்டும் என அழைப்புவிடுத்தார்.

குறுகிய கால சுயநல பலன்களை அடைய விரும்பும் அரசியல் கொள்கைகள் தோல்வியையே சந்தித்துள்ளன என்பதையும் திருப்பீடச் செயலர் சுட்டிக்காட்டினார்.

பலமதங்கள் பல இனங்கள் நிறைந்த இன்றைய நவீன சமூகத்தில் கிறிஸ்தவ மறையானது பேச்சுவார்த்தைகளுக்கும் மனந்திறந்த நிலைகளுக்கும் இணக்க வாழ்வுடன்கூடிய ஒத்துழைப்புக்கும் எப்போதும் அழைப்புவிடுத்துக் கொண்டிருக்கின்றது என மேலும் கர்தினால் பெர்த்தோனே கூறினார்







All the contents on this site are copyrighted ©.