2008-09-29 15:35:26

வானதூதர்கள் நமது ஆபத்து வேளைகளில் உதவி செய்கிறார்கள் – திருத்தந்தை 16ம் பெனடிக்ட்


செப்.29,2008. நம் கண்களால் காண முடியாதவாறு நம் மத்தியில் பிரசன்னமாய் இருக்கும் வானதூதர்கள், நம் வாழ்க்கையின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் நம் அருகில் இருந்து நம்மைக் காக்கின்றார்கள் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

காஸ்தெல் கண்டோல்போவிலுள்ள கோடை விடுமுறை இல்லத்திலிருந்து நாளை வத்திக்கான் திரும்புவதை முன்னிட்டு அந்நகர் சமூகத்திற்கு இன்று காலை நன்றியுரையாற்றிய திருத்தந்தை, இன்று சிறப்பிக்கப்படும் மிக்கேல் கபிரியேல் இரபேல் ஆகிய மூன்று அதிதூதர்களின் விழாவையொட்டிய சிந்தனைகளையும் வழங்கினார்.

நிறைய புனிதர்கள் வானதூதர்களுடன் நட்புறவுடன் வாழ்ந்துள்ளனர், குறிப்பிட்ட தருணங்களில் வானதூதர்கள் உதவி செய்ததற்கான எண்ணற்ற சான்றுகள் உள்ளன என்றும் கூறிய அவர், ஆபத்து வேளைகளில் அவர்கள் நம்மைப் பாதுகாக்கின்றார்கள் என்றார்.

மீட்பை உரிமைப் பேறாகப் பெறவிருப்போருக்குத் தொண்டாற்ற வானதூதர்கள் அனுப்பப்பட்டவர்கள் என்பதைக் குறிப்பிட்ட திருத்தந்தை, நம் ஆபத்து வேளைகளில் அவர்கள் நமக்கு உதவி செய்கிறார்கள் என்று கூறினார்.

மேலும் காஸ்தெல் கண்டோல்போ பஞ்சாயத்து தலைவர், ஊராட்சி அதிகாரிகள், ஊர் மக்கள், இத்தாலிய விமானப் படையினர் என ஒவ்வொருவரையும் குறிப்பிட்டு நன்றியும் தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.