2008-09-29 15:45:15

புனித பவுலும் வானதூதர்களும்


செப்.29,2008. ஒருவர் சொல்ல வேண்டிய ஒரு செய்தியை வேறு யாராவது வந்து சொன்னால், என்ன நீ தூது வந்திருக்கிறாயா என்று கேட்கிறோம். அல்லது ஒருவர் நேரிடையாகச் சென்று சொல்ல முடியாத ஒரு செய்தியை மற்றவர் மூலமாகத் தூது அனுப்புகிறோம். அப்படி அனுப்பும் போது இந்த நபரை தூது அனுப்புகிறேன் என்றும் தகவல் சொல்கிறோம். ஒரு நாடானது தனது நாடு சார்பாக பிற நாடுகளில் தனது தூதுவர்களை நியமிக்கின்றது. எனவே பொதுவாக, தூதர்கள் என்பவர்கள் ஒரு செய்தியை ஓரிடத்திலிருந்து மற்ற இடத்திற்கு எடுத்துச் செல்பவர்கள் என்று பொருள். ஆனால் வானதூதர்கள் அல்லது தேவதூதர்கள் என்பவர்கள் இறைவனின் செய்தியை இறைவன் குறிப்பிடும் ஆட்களுக்கு எடுத்துச் செல்பவர்கள். இவர்கள் இறைவனுக்கு விசுவாசமாக இருப்பவர்கள். இதற்கு விவிலியத்தில் பல மேற்கோள்களைக் காட்டலாம். ஆபிரகாமின் அடிமை மனைவி ஆகார், அவரது மனைவி சாராவின் கொடுமைக்குப் பயந்து ஓடிப் போன போது பாலை நிலத்தில் ஆண்டவரின் தூதர் ஆகாருக்கு உதவினார். ஆபிரகாம் தனது மகன் ஈசாக்கைப் பலியிட முற்பட்ட போது அவரை ஆண்டவரின் தூதர் தடுத்து நிறுத்தினார். விண்ணகத்தில் இறைத்தூதர்களின் நடுவே குழப்பம் தோன்றிய போது நல்ல தூதர்கள் அனைவரும் அதிதூதரான மிக்கேலின் தலைமையில் லூசிப் பேயையும் அவன் தோழர்களையும் நரகத்தில் தள்ளினர். தொபியாசின் நீண்ட பயணத்தில் இரபேல் தூதர் உற்ற துணையாளராக இருந்தார். மேலும் புதிய ஏற்பாட்டில் கபிரியேல் தூதர் நாசரேத்து கன்னி மரியாவுக்கு இயேசு பிறக்கும் மங்களச் நற்செய்தியை அறிவித்தார். புனித பேதுரு சிறையில் இருந்த போது அவரை கடவுளின் தூதர் விடுவித்தார். இவ்வாறு பழைய ஆகமத்திலும் புதிய ஆகமத்திலும் வானதூதர்களின் செயல்பாட்டிற்குப் பல எடுத்துக்காட்டுக்களைக் கூறலாம்.

செப்டம்பர் 29 மிக்கேல் கபிரியேல் இரபேல் ஆகிய மூன்று அதிதூதர்களின் விழா. கடவுளின் முன் நிற்பதாகச் சொல்லப்படும் ஏழு தேவதூதர்களில் ஒருவரான கபிரியேல் தூதர் வத்திக்கான் வானொலியின் பாதுகாவலர். இத்தூதர் விழாவை இவ்வானொலியும் இன்று சிறப்பித்தது. வருகிற வியாழனன்று காவல் தூதர்கள் விழா. மிக்கேல் என்ற எபிரேயச் சொல்லுக்கு கடவுளுக்கு நிகர் யார் என்பது பொருள். இத்தூதர் கடவுளின் சக்தியைக் குறிக்கிறார். இவர் தீய சக்தியாகிய அலகையை வெல்கிறார். கபிரியேல் என்ற எபிரேயச் சொல்லுக்கு கடவுளின் ஆற்றல் என்று அர்த்தம். தாழ்ச்சியும் ஆறுதலும் தரக்கூடிய செய்திகளை விண்ணகத்திலிருந்து இறைமக்களுக்குச் சேர்க்கும் பணி இவருடையது. இரபேல் என்ற எபிரேயச் சொல்லுக்கு கடவுள் குணமளிக்கிறார் என்று அர்த்தம். இவ்வுலகில் இரு சக்திகள் இருப்பதாக நம் அனுபவம் கூறுகின்றது. நம் இயல்பிலும் நன்மை, தீமை என்ற இரு எதிர்பட்ட பண்புகளைக் காண்கிறோம். எல்லாச் சமயங்களும் வானதூதர்கள் அல்லது தேவர்களை ஏற்று நம்பி வாழ்கின்றன. நம் ஒவ்வொருவரிலும் தேவதூதரும் சாத்தானும் இருக்கின்றனர். நாம் நம் நற்பண்புகளின் உந்துதலுக்கு நம்மையே கையளித்து அவற்றின்படி செயல்படும் போது நாம் வானதூதர்கள் போல் செயல்படுகிறோம். தீய ஆசைகளைப் பின்பற்றி நடக்கும் போது அலகையின் தூண்டுதலுக்கு ஆளாகிறோம்.

புனித பவுல் தமது திருமுகங்களில் குறிப்பாக கலாத்தியர், கொலோசையர் ஆகியோருக்கு எழுதிய திருமுகங்களில் வானதூதர்கள் பற்றிக் குறிப்பிடுகிறார். கலாத்தியர், அதிகாரம் ஒன்று வசனம் 8ல் பவுல் எழுதுகிறார் – நாங்கள் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியினின்று மாறுபட்ட ஒன்றை நாங்களோ, விண்ணிலிருந்து வந்த தூதரோ யார் அறிவித்தாலும் அவர்கள் சபிக்கப்படுக என்று. இவ்வாறு அவர் சாடுவதற்கான காரணம் என்ன. பவுல் தமது நற்செய்திப் பயணங்களின் போது இரு முறையாவது கலாத்திய திருச்சபையைச் சந்தித்திருக்கிறார். இவர் அறிவித்த நற்செய்தியைக் கேட்டு யூதர்களும் பிற இனத்தவர் பலரும் கிறிஸ்துவின் மீது விசுவாசம் கொண்டனர். அதேசமயம் யூத மறையின்பால் வெறிகொண்டு அலைந்த யூதக் கட்சியினரிடமிருந்து எதிர்ப்பும் எல்லையற்ற தொல்லையும் எதிர்பாராத முறையில் வந்து சேர்ந்தன. எனினும் அப்பக்கம் செல்லும் வழியில் மீண்டும் அந்நகர்களுக்குச் சென்று ஒவ்வொரு சபைக்கும் தலைவர்களை ஏற்படுத்திச் சீடர்களை உறுதிப்படுத்தினார். கலாத்தியரும் பவுலுக்கு நல்ல வரவேற்புக் கொடுத்தனர். அவர் உடல்நலம் குன்றியிருந்த போது அவர்கள் அவரைப் புறக்கணிக்கவில்லை. மாறாக கடவுளின் தூதரைப் போல், இல்லை, கிறிஸ்து இயேசுவைப் போல் தன்னை ஏற்றுக் கொண்டதாக 4ம் அதிகாரத்தில் எழுதியிருக்கிறார்.

இருப்பினும் கலாத்தியர்கள் புதுமையின்பால் நாட்டமும் எளிதில் மாறக்கூடிய தன்மையும், ஆழ்ந்த விசுவாச வாழ்வைவிட வெறும் ஆசாரத்தையும் வெளி அனுசாரத்தையும் பின்பற்றும் மனநிலையும் கொண்டவர்கள். எனவே எதிர்க் கட்சியினரின் பிரச்சாரத்தை எளிதில் நம்பத் தொடங்கினார்கள். பவுலை உண்மையான திருத்தூதராக ஏற்றுக் கொள்ளத் தயங்கினார்கள். வேறொரு நற்செய்தியைப் பின்பற்றுவதில் ஆர்வம் காட்டி வந்தார்கள். வலுவற்ற வறுமைமிக்க உலகப் பூதங்களுக்கு மீண்டும் அடிமையானார்கள். நாள், திங்கள், காலம், ஆண்டு முதலியவற்றைக் கணிக்கத் தொடங்கினார்கள். சுருங்கச் சொல்ல வேண்டுமானால் கலாத்திய கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவுடன் உறவற்றுப் போனார்கள். இதனைக் கேள்விப்பட்ட பவுல் தனது நீண்ட கால உழைப்பு வீண்தானோ என்று அஞ்சினார். இவ்வளவு குறுகிய காலத்திற்குள் மாறிவிட்டார்களே, தனது எதிர்காலப்பணி தடைபட்டுவிடுமோ என்று கலங்கினார். எனவே பவுல் எழுதுகிறார் - தான் அறிவித்த நற்செய்தியை எந்த மனிதரிடமிருந்தும் பெற்றுக் கொள்ளவில்லை. மாறாக இயேசு கிறிஸ்து அருளிய வெளிப்பாட்டினால் கிடைத்தது. எனவே நாங்கள் அறிவித்த நற்செய்தியினின்று மாறுபட்ட ஒன்றை நாங்களோ, விண்ணிலிருந்து வந்த தூதரோ யார் அறிவித்தாலும் அவர்கள் சபிக்கப்படுக என்று.

எனவே பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமடலில் ஒருவன் சட்டத்தினால் அன்று, கிறிஸ்துவிலேயே மீட்பு அடைகிறான், கிறிஸ்தவன் அன்பின் சட்டத்தாலேயே வழிநடத்தப்படுகிறான், தாம் போதிக்கும் படிப்பினையும் அதிகாரமும் இறைவனிடமிருந்தே வருகின்றன என்று குறிப்பிடுகிறார்.

பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமடல் அதிகாரம் 2, வசனம் 18லும் வானதூதர்கள் பற்றிக் குறிப்பிடுகிறார். போலித் தாழ்மையையும் வானதூதர்களை வழிபடுவதையும் விரும்புகின்ற மக்கள், உங்களுக்கு எதிராகத் தீர்ப்பளிக்க இடம் கொடாதீர்கள் என்கிறார். இப்படி எழுதுவதற்கும் ஒரு பின்னணி உள்ளது. கொலோசை திருச்சபையில் பெரும்பாலும் புறஇனத்தாரே இருந்தனர். எனினும் யூதர்களும் இருந்தனர். யூதர்கள் கொள்கையளவில் தூதர்களை நம்பினர். இத்தூதர்கள் தம்மிடமுள்ள ஆற்றலால் மனிதரை அடிமைப்படுத்தி வருவதாகக் கருதினர். எனவே துன்பத்திலிருந்து விடுதலைபெற இவர்களின் துணையை நாடினர். இவற்றோடு இன்னும் சில பழக்கவழக்கங்களும் இவர்களிடம் இருந்தன.



யூதர்களிடம் காணப்பட்ட சில கொள்கைகள், பழக்கவழக்கங்கள் போலவே பிறஇனத்தவரிடையேயும் இருந்தன. வானியலே இவர்களது சமய வாழ்வுக்கு வரைபடம் தீட்டிக் கொடுத்தது. சந்திரனும் விண்மீன்களும் மனித வாழ்வைப் பாதிக்கின்றன என்று நம்பினர். பூதங்கள் என்றழைக்கப்படும் ஆவி வடிவங்களே இறைவனின் கூறுகள். இவையே மனிதனின் கதியை நிர்ணயிக்கின்றன. எனவே மீட்படைய அப்பூதங்களைப் பற்றிய அறிவைப் பெற வேண்டும், இவ்வறிவைப் பெற சமய வழிபாடுகளில் பங்கு பெற வேண்டும் என்று நம்பினர். யூதர்களும் தங்களது துன்பம் நீங்க வானதூதரின் துணை வேண்டும் என்று நாடினர். எனவே யூதரின் இச்செயல் பிறஇனத்தவரின் நம்பிக்கைக்குக் கைகொடுப்பது போல் இருந்தது. சுருங்கச் சொல்ல வேண்டுமானால் கிறிஸ்துவும் வானதூதருக்குச் சரிசமம் என்றனர். கிறிஸ்துவை வானதூதரில் ஒருவராகக் கருதினர். எனவே கிறிஸ்துவின் தனித்தன்மையே இங்கு கேள்விக் குறியானது. கொலோசையரின் தவறான கொள்கைகளால், நமபிக்கைகளால் கிறிஸ்தவம் கிழிக்கப்பட்டது. கிறிஸ்தவப் போதனைகள் காயமடைந்தன. எனவே பவுல், கிறிஸ்துவே அனைத்திற்கும் முதன்மையானவர் என்பதை வலியுறுத்தி மடல் எழுதினார்.

அன்பர்களே, நம் ஒவ்வொருவரையும் கடவுள் பாதுகாக்கின்றார் என்பதை வானதூதர்கள் உணர்த்துகின்றனர் என்று ஆன்ரு கிரிலே என்பவர் சொன்னார். நாம் நம் தீய சக்திகளை, தீய நம்பிக்கைகளை எதிர்த்துப் போராட வேண்டும். அன்று இயேசுவைக் கண்ட தீய சக்திகள், இவரே உண்மையான இறைமகன் என்று சொல்லி அலறி அடித்து ஓடின. இன்றும் ஓடுகின்றன. மிக்கேல் கபிரியேல் இரபேல் அதிதூதர்கள் இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கும் தூதர்களாய்த்தான் இருந்தார்கள். நாம் நற்செய்தியை அறிவிப்பதோடு அதனை வாழ்ந்து காட்டுவோம். அப்போதுதான் நாம் உண்மையான கிறிஸ்தவர்களாவோம்.

பூனையைக் கண்டு பயந்து வாழ்ந்து கொண்டிருந்த ஓர் எலி, இதுவும் ஒரு வாழ்வா என்று சலித்துப் போய் முனிவரிடம் சென்று கேட்டது. சுவாமி நான் நாயாக மாற உதவுங்கள். அப்பொழுதுதான் பூனையை மிரட்ட முடியும் என்றது. மனமிரங்கிய முனிவர் எலியை நாயாக மாற்றினார். உடனே அது அடுப்படி சென்று அசந்து தூங்கிக் கொண்டிருந்த பூனையை நேருக்கு நேர் சந்தித்தது. நாயைக் கண்டதும் முதலில் பம்மிய பூனை, பின்னர் சுதாரித்துக் கொண்டது. தனது உடம்பை வில்லாக வளைத்து கை கால்கள் நகங்கள் அனைத்தையும் விரித்துக் காட்டியபடி மீசையை முறுக்கி புலியைப் போல் சீறியது. பயந்து நடுங்கிய நாய், மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க முனிவரிடம் போய் நின்றது. விபரம் கேட்டறிந்த முனிவர் அதனிடம், முட்டாளே, நீ இப்பொழுது எலியல்ல, நாய் என்பது உனக்குத் தெரியாதா என்றார். அதற்கு நாயாக மாறியிருந்த எலி சொன்னது – எனக்குத் தெரியும் சுவாமி. ஆனால் நான் நாயாக மாறிய விடயம் அந்தப் பூனைக்குத் தெரிய வேண்டுமே என்று.

ஆம். உள்ளத்தில் மாற்றமில்லா உருமாற்றம் உருப்படாது. நாம் இயேசுவின் வாழ்வை நம் வாழ்க்கையில் பிரதிபலிக்க வேண்டுமானால் நம் உள்ளங்கள் மாற்றமடைய வேண்டும்.








All the contents on this site are copyrighted ©.