2008-09-27 14:54:08

வன்முறை குண்டு வெடிப்பு தாக்குதல்கள் நிறுத்தப்படுவதற்குத் திருத்தந்தை அழைப்பு


செப்.27,2008. மனிதனின் மகிழ்ச்சியையும் நலவாழ்வையும் அமைப்பு முறைகளாலோ அல்லது சமூக அரசியல் வாழ்க்கை நிலைகளாலோ அடைய முடியாது, மாறாக திருச்சபை சமூகங்களும், பள்ளிகளும், தொழில்களும், அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களும் நல்லிணக்கதுட்ன் வாழ்வதாலே அடைய முடியும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

திருப்பீடத்துக்கான செக் குடியரசின் புதிய தூதுவர் பாவெல் வொசலிக்கிடமிருந்து இன்று நம்பிக்கைச் சான்றிதழைப் பெற்று உரையாற்றிய திருத்தந்தை, அடுத்த ஆண்டில் ஐரோப்பிய சமுதாய அவைக்குத் தலைமை வகிக்கும் செக் குடியரசு ஐரோப்பாவில் பொருளாதார முன்னேற்றமும் சமூக நீதியும் தேசிய இறையாண்மையும் ஒன்றிப்பும் காக்கப்படுவதற்கு உழைக்கும் என்ற தனது நம்பிக்கையையும் தெரிவித்தார்.

செக் குடியரசில் திருச்சபை சொத்துக்கள் குறித்த விவகாரங்களுக்கென அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் குழு நேர்மையுடனும் நீதியுடனும் செயல்படும் என்பதிலும் பிராக்கிலுள்ள பேராலயத்தின் எதிர்காலம் பற்றி நல்லதொரு தீர்வு எடுக்கப்படும் என்பதிலும் தான் உறுதியாய் இருப்பதாகத் திருத்தந்தை கூறினார்.

பாகிஸ்தானின் இஸ்லாமபாத்தில் அண்மையில் இடம் பெற்ற குண்டு வெடிப்புத் தாக்குதல்களில் பாகிஸ்தானுக்கான செக் குடியரசு தூதுவர் இவோசெட் அரெக் இறந்தது

குறித்த அனுதாபங்களைத் தெரிவித்ததோடு இத்தகைய வன்முறை குண்டு வெடிப்பு தாக்குதல்கள் நிறுத்தப்படுவதற்குத் தான் தினமும் செபிப்பதாகவும் திருத்தந்தை கூறினார். இச்சந்திப்பு காஸ்தெல் கண்டோல்போவிலுள்ள பாப்பிறைகளின் கோடை விடுமுறை இல்லத்தில் நடைபெற்றது.








All the contents on this site are copyrighted ©.