2008-09-20 15:47:45

அடக்குமுறையையும் வன்முறைத் தாக்குதல்களையும் எதிர்கொள்ளும் விசுவாசிகளை ஆயர்கள் பாதுகாக்க வேண்டும் - திருத்தந்தை


செப்.20, 2008. கிறிஸ்தவத்துக்கு எதிரான போக்குகளும் சமயப் புறக்கணிப்புகளும் உலகப் போக்கு மதிப்பீடுகளும் அதிகமாகக் காணப்படும் இக்காலத்தில், ஆயர்கள் அடக்குமுறையையும் வன்முறைத் தாக்குதல்களையும் எதிர்கொள்ளும் விசுவாசிகளை பாதுகாக்க வேண்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கேட்டுக் கொண்டார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் அருள்பொழிவு செய்யப்பட்ட ஆயர்களுக்கென வத்திக்கான் நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்ட ஆயர்களை இன்று காஸ்தெல் கண்டோல்போவில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

அநேக இடங்களில் கத்தோலிக்கர்கள் சிறுபான்மையாக வாழ்வதையும், பிற சமயத்தவருடனான சவால்களை மிகத் திறமையுடன் ஆயர்கள் எதிர்கொள்ள வேண்டியிருப்பதையும் சுட்டிக் காட்டிய திருத்தந்தை, அவ்வேளைகளில் பயப்படாமலும் தைரியமிழக்காமலும் இருக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

கிறிஸ்துவை அன்பு செய்வது, பிறருக்கான பணியில் வாழ்வைத் தியாகம் செய்வது எப்படி என்று, நற்செய்தி அறிவிப்புப் பணியில் பல இடர்களை எதிர்கொண்ட புனித பவுலிடம் கற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்திய அவர், புற இனத்தாருக்கு நற்செய்தி அறிவித்த புனித பவுலின் பணியை ஆயர்களாகிய நீங்கள் தொடர்ந்து நடத்த வேண்டியவர்கள் என்றார்.

துன்பம் கிறிஸ்துவோடும் சகோதரரோடும் ஒன்றிணைய வைக்கின்றது, அன்பின் நிறைவை எடுத்தரைக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

திருப்பீட விசுவாசப் பரப்புப் பேராயத்தின் கீழ் இயங்கும் நாடுகளின் புதிய ஆயர்களுக்கு இம்மாதம் 8ம் தேதி முதல் 20ம் தேதி வரை அப்பேராயம் நடத்திய இக்கருத்தரங்கில் 9 ஆசிய நாடுகளின் 31 ஆயர்கள் உட்பட 44 நாடுகளின் 104 ஆயர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் 17 பேர் இந்தியர்கள். இருவர் இலங்கை நாட்டினர். 4 பேர் தமிழர்கள். ஆயர்கள் தங்கள் திருப்பணியை ஆழமாக அறிந்து கொள்ளும் நோக்கத்தில் இத்தகைய கருத்தரங்கு 1994ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டு வருகிறது.








All the contents on this site are copyrighted ©.