2008-09-16 14:51:15

கருக்கலைப்பு செய்வதற்கு அதிக சலுகைகள் வழங்கத் திட்டமிடும் ஸ்பெயின் அரசின் திட்டத்திற்கு ஆயர்கள் எதிர்ப்பு


செப்.16, 2008. கருக்கலைப்பு செய்வதற்கு அதிக சலுகைகள் வழங்கத் திட்டமிடும் ஸ்பெயின் அரசின் முயற்சிக்கு அந்நாட்டு ஆயர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சுதந்திரம், ஜனநாயகம் என்ற பெயரில் கொலை செய்வதற்குச் சலுகைகள் வழங்குவது அரசின் ஊழலைச் சுட்டிக் காட்டுகிறது என்று வலென்சியா கர்தினால் அகுஸ்தின் கார்சியா காஸ்கோ கூறினார்.

கருக்கலைப்பை ஊக்குவிப்பது மரணத்தை ஊக்குவிப்பதாகும், இது அமைதியின் மீது அல்ல, வன்முறையின் மீது பந்தயம் கட்டுவதாக இருக்கின்றது என்றும் கர்தினால் காஸ்கோ கூறினார்.

ஸ்பெயினில் 1985ம் ஆண்டிலிருந்து அமலில் இருக்கும் விதிமுறையின்படி, கற்பழிப்பு விவகாரத்தில் 12 வாரங்கள் வரையிலான கர்ப்பம், தாயின் நலனுக்கு அச்சுறுத்தல் ஆகியவற்றின் போது கருக்கலைப்பு செய்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் தற்போதைய அரசின் பரிந்துரை நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டால் எக் எக்காரணத்திற்காகவும் கருக்கலைப்பு செய்வதற்கு அனுமதி அளிக்கப்படும். ஸ்பெயினில் ஆண்டுக்கு ஒரு இலட்சம் கருக்கலைப்புகள் வீதம் நடத்தப்படுகின்றன.

மேலும் ஸ்பெயின் அரசின் இத்திட்டம் குறித்துப் பேசிய மலாகா ஆயர் அந்தோணியோ தொராடோ சொத்தோ, நாட்டின் பொருளாதாரப் பிரச்சனைகளை மறக்கடிப்பதற்காக அரசு கருக்கலைப்பு சட்டத்தில் மாற்றம் கொண்டுவர விரும்புகிறது என்றார்.








All the contents on this site are copyrighted ©.