2008-09-16 14:47:36

ஐ.நா. பொது அவையின் 63வது அமர்வுக்கு திருத்தந்தை வாழ்த்து


செப்.16, 2008. அமெரிக்க ஐக்கிய நாட்டு நியுயார்க் நகரிலுள்ள ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தலைமையகத்தில் இன்று தொடங்கிய ஐ.நா. பொது அவையின் 63வது அமர்வுக்குத் தனது செபம் நிறைந்த வாழ்த்துக்களை அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

ஐ.நா.வின் இந்த 63வது அமர்வு வரும் மாதங்களில் முழு மனித சமுதாயத்தின் நலனுக்காக நடத்தவிருக்கும் விவாதங்கள், தீர்மானங்கள், குறிப்பாக மில்லேனேய வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது பற்றிய பேச்சு வார்த்தைகள் நன்முறையில் நடைபெறுவதற்குத் தான் செபிப்பதாகவும் உறுதியளித்துள்ளார் திருத்தந்தை.

திருத்தந்தையின் பெயரால் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே அனுப்பிய இச்செய்தியை, இந்த ஐ.நா. அமர்வு தொடங்குவதையொட்டி நடைபெற்ற செபவழிபாட்டில், ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் செலஸ்தினோ மிலியோரே வாசித்தார்.

சர்வதேச மனித உரிமைகள் சாசனம் வெளியிடப்பட்டதன் 60 ஆம் ஆண்டையொட்டி கடந்த ஏப்ரலில் திருத்தந்தை, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தலைமையகத்திற்குச் சென்றதை அச்செய்தியில் நினைவு கூறியுள்ளதோடு ஐ.நா.வின் ஆவணங்களில் வலியுறுத்தப்பட்டுள்ள மேன்மையான நன்னெறி விழுமியங்களும் நீதி சார்ந்த கோட்பாடுகளும் காக்கப்படுவதற்குச் சர்வதேசத் தலைவர்கள் உழைக்குமாறு அச்சமயத்தில் விண்ணப்பித்ததை மீண்டும் அவர் நினைவுபடுத்த விரும்புவதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மனிதனின் மாண்பு காக்கப்படவும், தோழமை, சுதந்திரம், அமைதி ஆகியவற்றின் அடிப்படையில் உலகைக் கட்டி எழுப்பவும் முயற்சிகள் எடுக்கும் உலகத் தலைவர்கள் தங்களது நடவடிக்கைகளில் மேலும் வலுப்படுத்தப்படுவதற்குத் திருத்தந்தை செபிப்பதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.