2008-09-14 15:09:33

வன்முறை, போர், பயங்கரவாதம்,பசி ஆகியவற்றால் துன்புறும் அப்பாவி மக்களுக்கு கருணை காட்ட திருத்தந்தை அழைப்பு




செப்.14, 2008. 150 ஆண்டுகளுக்கு முன்னர், 1858ஆம் ஆண்டு பெப்ருவரி 11ஆம் தேதி, லூர்து நகருக்கு சற்று அப்பால், மசபியேல் என்ற குகையில், அந்நகரைச் சேர்ந்த பெர்னதெத் சுரூபி என்ற எளிமையான இளம் சிறுமி ஓர் ஒளியைப் பார்த்தாள். அவ்வொளியில் அச்சிறுமி ஓர் அழகான, மற்றவர்களைவிட மிக அழகான ஓர் இளம் நங்கையை பார்த்தாள். அப்பெண் பெர்னதெத்திடம், மிகவும் பாசமாகவும், கனிவாகவும் மரியாதையோடும், நம்பிக்கையோடும் கேட்டாள் - நீ இவ்விடத்திற்கு ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வருவாயா என்று. இத்தகைய மென்மையான உரையாடலில், அப்பெண்ணாகிய அன்னைமரியா, செபம், தபம், மனமாற்றம் ஆகியவை பற்றிய சில எளிமையான செய்திகளை வழங்குவதற்குப் பெர்னதெத்திற்குக் கற்றுக் கொடுத்தார். மரியா அழகாக இருந்திருக்க வேண்டும். இதில் வியந்து போன அச்சிறுமி, 1858ஆம் ஆண்டு மார்ச் 25ம்தேதி கண்ட காட்சியின் போது அன்னை மரியாவின் பெயரைக் கேட்டாள். அன்னையும் நானே அமல உற்பவம் என்று தனது பெயரை அறிவித்தார் என்றார் திருத்தந்தை.

RealAudioMP3 மறைநூலில் புனித கன்னிமரியா பற்றி விளக்கப்பட்டிருப்பது போல, கதிரவனை ஆடையாக அணிந்திருந்த அவரை இப்பொழுது உற்று நோக்குவோம். வெற்றி வேந்தனாகிய இறைவனை நோக்கி நம்மை அவர் இட்டுச் செல்ல அனுமதிப்போம். இறைவன் தமது அழகு சிறப்பான விதத்தில் ஒளிரச் செய்வதற்கு அவர் தேர்ந்தெடுத்துளள இடங்களில் லூர்து நகரும் ஒன்று. எனவேதான் நான்காவது காட்சியிலிருந்து பெர்னதெத் இக்குகைக்கு வரும் போதெல்லாம் ஒவ்வொரு நாள் காலையிலும் நேர்ச்சை மெழுகுவர்த்தியை கொழுத்தினாள். கன்னிமரியாவை அவள் காணும் வரை அதைத் தனது இடது கையில் பிடித்திருந்தாள். விரைவில் மக்களும் பெர்னதெத்திடம் ஒரு மெழுகுவர்த்தியை கொடுத்து இக்குகைக்குள் தரையில் வைக்கும்படி ௬றினர். வெகு சீக்கிரமாக மக்களும் ஒளியும் அமைதியும் நிறைந்த இந்த இடத்தில் தங்களது சொந்த மெழுகுவர்த்திகளை ஏற்றினர். இறைவனின் தாயும் இந்த ஒளியில் தம்மைக் காட்டினாள். பெர்னதெத்தின் அடிச்சுவட்டைப் பின்பற்றி லூர்து நகருக்குத் திருப்பயணமாக வரும் நாம் விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையேயான அசாதாரண நெருக்கத்தை அனுபவிக்கிறோம்.



அன்னைமரியா கொடுத்த காட்சிகளின் போது பெர்னதெத் அன்னைமரியாவை உற்று நோக்கியவண்ணம் செபமாலை செபித்தாள். இது செபமாலை பக்தியின் கடவுள் மைய பண்பை ஆழமாக உறுதிப்படுத்துகிறது. நாமும் செபமாலை செபிக்கும் போது, மரியா தமது திருமகனாம் இயேசு கிறிஸ்துவின் வாழ்வை நாம் தியானிப்பதற்கு உதவுகிறார். திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் இரண்டு தடவைகள் லூர்துக்குத் திருப்பயணம் மேற்கொண்டார். அவரது வாழ்விலும் பணியிலும் புனித கன்னி மரியாவின் பரிந்துரையை எவ்வளவு தூரம் சார்ந்திருந்தார் என்றால் அவர் செபமாலை செபிக்கும் பழக்கத்தை ஊக்குவித்தார். ஒளியின் மறையுண்மைகள் பற்றித் தியானிக்கவும் வழிவகுத்துள்ளார் என்ற திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட், மெழுகுதிரி பவனி பற்றியும் எடுத்துரைத்தார். இப்பவனி மாபெரும் திருச்சபை நிகழ்வாகும். அதேசமயம் இது துன்புறும் மக்களுடன் மிக ஆழமான ஐக்கியத்தையும் காட்டுவதாக இருக்கின்றது என்றார்.

நாம் வன்முறை, போர், பயங்கரவாதம், பசி ஆகியவற்றுக்குப் பலியாகும் அப்பாவி களையும், அநீதிகள், அலைக்கழிப்புகள், பேரிடர்கள், காழ்ப்புணர்வு, அடக்குமுறை ஆகியவற்றின் விளைவுகளை அனுபவிப்பவர்களையும், தங்களின் மனித மாண்பும் அடிப்படை உரிமைகளும் தாக்கப்படுபவர்களையும், சுதந்திரமாகச் செயல்படுவது, சுதந்திரமாகப் பேசுவது ஆகியவை மறுக்கப்படுபவர்களையும், இன்னும் குடும்பப் பிரச்சனைகள், வேலையில்லாமல் துன்புறுவோர், நோயாளிகள், தனிமையில் வாடுவோர், குடியேற்றதாரர்கள், பலவீனர்கள் ஆகியோரை நினைப்போம். கிறிஸ்துவுக்காகத் துன்பப்படுவோர், இறப்போர் ஆகியோரை நாம் எப்படி மறக்க முடியும் என்றார் திருத்தந்தை.

நமது செபம் கடவுளன்பின் செயலாக, பிறரன்பின் செயலாக இருக்குமாறு அன்னைமரியா கற்றுக் கொடுக்கிறார். மரியோடு சேர்ந்து செபிக்கும் பொழுது நமது இதயம் துன்பப்படுவோரை வரவேற்கின்றது. நமது வாழ்வு பிறரை வரவேற்காத ஒன்றாக மாறாமல் எப்படி இருக்க முடியும். லூர்து, ஒளியின் இடம். RealAudioMP3 ஏனெனில் இது ஐக்கியம், நம்பிக்கை மற்றும் மனமாற்றத்தின் இடமாகும். இருள் மூடும் போது நாம் விசுவாசத்தின், செபத்தின், நம்பிக்கையின், அன்பின் விளக்கை ஏற்ற வேண்டும். இத்தகைய செயலானது, நாம் கேட்ட எந்த சொல்லையும், பேசிய எந்த வார்த்தையையும் விட நம் உள்ளத்தை ஆழமாகத் தொடும். பாவம் நமது கண்களைக் குருடாக்குகிறது. இது நாம் நம் சகோதர சசோதரிகளுக்கு வழி காட்டிகளாக நம்மை முன்வைப்பதை தடுக்கிறது. இது நம்மை அவர்கள் வழி நடத்துவதற்கு அவர்கள் மீது நம்பிக்கை வைக்கவும் விருப்பமில்லாமல் செய்கிறது. எனவே நாம் ஒளியேற்றப்பட வேண்டும்.

ஒளியாய் இல்லாத நம்மைப் பார்த்து கிறிஸ்து, நீங்கள் உலகின் ஒளி என்கிறார். பிறரன்பின் ஒளியை ஒளிரச் செய்யும் பொறுப்பை நம்மிடம் கொடுக்கிறார். இந்த லூர்து திருத்தலத்தில் நமது அழைப்பின் எளிமைத் தன்மையைக் கண்டுணர வேண்டும். நமது அழைப்பு என்பது அன்பு செய்வதே. இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் திருச்சிலுவை உயர்த்தப்பட்ட திருவிழா கொண்டாட்டம் இப்பேருண்மையின் மையத்திற்கு நமமை இட்டுச் செல்கின்றது. திருச்சிலுவையே, இயேசுவின் அன்பின் மிக உன்னத மற்றும் நிறைவானதொன்றாகும். திருச்சிலுவையின் மூலம் நமது முழுவாழ்வும் ஒளியும் வலிமையும் நமபிக்கையும் பெறுகிறது. லூர்து திருத்தலத்திற்கு வருகிறவர்கள் சில புதுமைகளைப் பெறும் நம்பிக்கையோடு, அவ்வாறு மனதில்௬ட நினைத்து வருகிறார்கள். ஆனால் திரும்பிச் செல்லும் போது கடவுள் பற்றிய, பிறர் மீதான தங்கள் கண்ணோட்டத்தில் மாற்றம் பெற்றுச் செல்லுகின்றனர். திருச்சபையின் வாழ்வில் ஆன்மீக அனுபவம் பெற்றுச் செல்கின்றனர். நமபிக்கை, பரிவு, கனிவு ஆகியவை அவர்கள் இதயத்தில் ஊற்றெடுக்கின்றன. கிறிஸ்துவே நமது ஒளி, அவரே நமது நமபிக்கை நமது வாழ்வு என்று இவ்வுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.

RealAudioMP3








All the contents on this site are copyrighted ©.