2008-09-13 22:46:28

நோட்டர்டாம் பேராலயத்தில் திருத்தந்தை . 130908.


வெள்ளிக்கிழமை மாலை 7.15 மணிக்கு இந்திய நேரம் இரவு 10.45 க்கு பாரிஸ் மாநகரில் மைல் கல்லாக விளங்கும் உலகப் புகழ்பெற்ற நோட்டர்டாம் பேராலயத்தில் திருத்தந்தை மாலைச் செப வழிபாட்டை நடத்தினார் . ஆண்டவனுக்கு நன்றி கூற அங்கு 2 ஆயிரத்துக்கும் அதிகமான குருக்கள் துறவியர், அருள் சகோதரிகள் குருமாணவர்கள் நிறைந்திருந்தனர் . பிற மத நண்பர்களும் கூடியிருந்தனர் . நோட்டர்டாம் என்பதன் தமிழ்ப் பதம் நம் மாதா என்பதாகும் . அந்தப் பேராலயம் பாரிஸ் மறைமாவட்டத்தின், கடவுள் பிரசன்னத்தைப் பிரதிபலிக்கும் புகழ் மிக்க தாய்ப் பேராலயமாகத் திகழ்கிறது . பார்ப்பவர்கள் வியப்புறாது செல்வதில்லை . கி. பி .1163 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டியவர் திருத்தந்தை 3 ஆம் அலெக்சாண்டர் . திருச்சபையின் முதல் வேதசாட்சியான புனித ஸ்தேபான் நினைவாகத் தொடங்கப்பட்ட அப்பேராலயம் தேவாலயக்கோபுரங்கள் கெம்பீரமாக எழுந்த இடைக்காலத்தில் மிகப்பெரிய அழகுரு பேராலயமாக வளர்ச்சியடைந்தது . கி.பி. 1245 ல் அதன் 130 மீட்டர் உயர இரட்டைக் கோபுரம் எழுப்பப்பட்டது. ஒரே சமயத்தில் தேவாலயத்தினுள் 6500 பேர் அமர முடியும் . புகழ்பெற்ற சிற்பி நிக்கோலாஸ் கோஸ்டோ என்பவரால் செதுக்கப்பட்ட அன்னை மரியின் மிக அழகான சுரூபம் ஒன்று ஆலயத்தில் உள்ளது . இங்குதான் 13 ஆவது லூயிஸ் மன்னர் பிரான்ஸ் நாட்டை அன்னை மரியின் பாதுகாவலில் அர்ப்பணித்தார் . ஆகஸ்ட் 15 ல் அன்னையின் விண்ணேற்புப் பெரு விழா நாளில் அன்னையின் திருவுருவச் சுரூபத்தோடு அங்கு ஆண்டுதோறும் நகர் வலம் வரும் திருப்பவனி நடைபெறுகிறது . இங்குதான் நெப்போலியன் டிசம்பர் திங்கள் 2 ஆம் நாள் 1804 ஆம் ஆண்டு மன்னராக முடிசூட்டிக்கொண்டார் . இங்கு திருத்தந்தையர் 7 ஆவது பத்திநாதரும், 2 ஆம் ஜான் பவுலும் முன்னர் வருகை தந்திருந்தனர் . செப வழிபாட்டின் முடிவில் பாரிஸ் நகர நோட்டர்டாம் பேராலயத்தின் முன் வளாகத்தில் மகிழ்ச்சியோடு ஆர்ப்பரித்து திருத்தந்தையை வரவேற்ற இளைஞர்களுக்கு திருத்தந்தை உரை வழங்கினார் . பின்னர் இளைர்களுக்கு இரவு நேர கண் விழிப்பு செப வழிபாட்டை பேராலயத்தில் தொடங்கி வைத்தார் திருத்தந்தை. இரவு 8.30 மணிக்கு இந்திய நேரம் இரவு 12 மணிக்கு நோட்டர்டாம் பேராலயத்திலிருந்து திருத்தந்தை 6 கி.மீ. தொலைவில் உள்ள வத்திக்கான் தூதரக மாளிகைக்குச் சென்றார் . அவரோடு சென்றவர்களோடு இரவு உணவு உட்கொண்டார் . அதன் பிறகு அம்மாளிகையில் உள்ள இறைமக்களோடு நலம் விசாரித்துப் பேசினார் .








All the contents on this site are copyrighted ©.