2008-09-12 15:17:57

திருத்தந்தையின் பிரான்சு நாட்டுக்கானத் திருப்பயணம் – பாரிசில் திருத்தந்தை


செப்.12,2008. பிரான்ஸ் மக்களே, உங்கள் நாடு எனக்குப் புதிதல்ல. பல தடவைகள் உங்கள் நாட்டுக்குச் செல்லும் பேறு பெற்றுள்ளேன். விருந்தோம்பலும் சகிப்புத் தன்மையும் நிறைந்த உங்களது பெருந்தன்மையான மரபையும், உங்கள் நாட்டின் கிறிஸ்தவ விசுவாசத்தின் உறுதிப்பாட்டையும் அதன் மேன்மையான மனித மற்றும் ஆன்மீகக் கலாச்சாரத்தையும் கண்டு பாராட்டி மகிழ்ந்திருக்கிறேன். உங்கள் நாட்டிற்கு அமைதி மற்றும் சகோதரத்துவத்தின் தூதுவராகத் திருப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன். லூர்து நகரில் அன்னை மரியின் திருப்பாதத்தில் அமர்ந்து அகிலத் திருச்சபைக்காகவும், குறிப்பாக நோயாளிகள், கைவிடப்பட்டோருக்காகவும், உலகின் அமைதிக்காகவும் செபிக்கவுள்ளேன். தம் பிள்ளைகளின் தேவைகள் மீது எப்பொழுதும் கரிசனையாய் இருக்கும் தாய் மரியா, உங்கள் அனைவரின், குறிப்பாக, இளையோரின் நம்பிக்கையின் ஒளியாய் இருப்பாராக. இந்நம்பிக்கையானது உங்கள் வழிகளை ஒளிர்வித்து வழிநடத்தட்டும். எனது பிரான்சுக்கான இத்திருப்பயணம் நிறையப் பலன்களைக் கொண்டுவருவதற்கென செபியுங்கள்.



அன்பர்களே, திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட், இன்று காலை தொடங்கிய பிரான்ஸ் நாட்டுக்கான தமது முதல் திருப்பயணத்தைக் கண்முன் கொண்டு, கடந்த புதன் பொது மறை போதகத்தில் ப்ரெஞ்ச் மக்களுக்கென வழங்கிய செய்தியில் இவ்வாறு ௬றினார். நான்கு நாட்கள் கொண்ட திருத்தந்தையின் இந்த பத்தாவது வெளிநாட்டுத் திருப்பயணம், இரண்டு பகுதிகளைக் கொண்டது. இதன் முதல் பகுதி பாரிசிலும் இரண்டாவது பகுதி லூர்து நகரிலும் நடைபெறுகின்றது. இன்று காலை காஸ்தெல் கண்டோல்போ கோடை விடுமுறை இல்லத்திலிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்ட திருத்தந்தை, உரோம் ப்பியுமிச்சினோ சர்வதேச விமான நிலையம் வந்து அங்கிருந்து ஆல்இத்தாலியா விமானம் எ321ல் பிரான்சுக்குப் புறப்பட்டார். இத்தாலிய அரசுத் தலைவர் ஜார்ஜோ நாப்போலித்தானோவுக்குத் தனது வாழ்த்துத் தந்தியையும் அனுப்பினார். லூர்து நகரில் அன்னை கன்னிமரியா காட்சி கொடுத்ததன் 150 ஆம் ஆண்டையொட்டி அங்கு செல்வதாகக் ௬றி அனைவருக்காகவும் குறிப்பாக நோயாளிகளுக்காகத் தான் சிறப்பாகச் செபிக்கவிருப்பதை அத்தந்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.



வத்திக்கான் மற்றும் பிரான்சு நாடுகளின் கொடிகளுடன் கம்பீரமாக புறப்பட்ட ஆல்இத்தாலியா விமானத்தில், 1108 கிலோ மீட்டர் தூரத்தை இரண்டு மணி பத்து நிமிட நேரம் பயணம் செய்து பிரான்ஸ் தலைநகர் பாரிசின் ஓர்லி விமான நிலையத்தை முற்பகல் பதினோறு மணி பத்து நிமிடங்களுக்குச் சென்றடைந்தார் திருத்தந்தை. அங்கு பிரான்ஸ் அரசுத் தலைவர் நிக்கொலா சர்கோசி, அவரது மனைவி, பிரதமர் பிரான்சுவா பியோன், பிரான்ஸ்க்கானத் திருப்பீடத்தூதுவர், பாரிஸ் பேராயர் கர்தினால் ஆந்ரே வ்வாங்த்துருவா உட்பட பல அரசு மற்றும் திருச்சபை பிரதிநிதிகள் திருத்தந்தையை வரவேற்றனர். ஏற்கெனவே திட்டமிடப்பட்ட இப்பயணத் திட்டத்தில் அரசுத் தலைவர் விமான நிலையத்திற்கு வருவதாக குறிக்கப்பட்டவில்லை என்பது கவனிக்கத்தக்கது.



1955இல் பாரிசில் பிறந்த சர்கோசி, அரசியல் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். 2007 ஆம் ஆண்டு மே 6ம் தேதியிலிருந்து அரசுத் தலைவராகப் பணியாற்றுகிறார். 1954 இல் பிறந்த பிரதமர் பிரான்சுவா பியோன், சட்டக் கல்வியில் முனைவர் பட்டம் பெற்றிருப்பவர். ஐந்து குழந்தைகளுக்குத் தந்தையான இவர், 2007ஆம் ஆண்டு மே 17ம் தேதியிலிருந்து பிரதமராகப் பணியாற்றுகிறார். இவ்விமான நிலையத்தில் திருத்தந்தைக்கு இராணுவ அணி வகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது.



அவ்வரவேற்பிற்குப் பின்னர் 25 கிலோ மீட்டர் தூரம் காரில் பயணம் செய்து பாரிசிலுள்ள திருப்பீடத் தூதரகம் சென்றார் திருத்தந்தை. தூதரகத்திற்கு வெளியே பெருமளவான மக்கள் ௬டி நின்று கைதட்டி ஆரவாரித்து திருத்தந்தையைக் கண்டு மகிழ்ந்தனர். சிறிது நேர ஓய்வுக்குப் பின்னர் அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள எலிசே அரசுத் தலைவர் மாளிகை சென்றார். முக்கிய நிகழ்வுகளில் மட்டுமே வழங்கப்படும் சிவப்பு கம்பள வரவேற்பு அங்கு திருத்தந்தைக்குக் கொடுக்கப்பட்டது. பின்னர், தூதுவர்கள் அறையில் அரசுத் தலைவர் நிக்கொலா சர்கோசியும் திருத்தந்தையும் 15 நிமிடங்கள் தனியே சந்தித்துப் பேசினர். இதற்குப் பின்னர் திருத்தந்தையும் அரசுத் தலைவர் நிக்கொலா சர்கோசியும் பரிசுப் பொருட்களைப் பரிமாறிக் கொண்டனர். பாஸ்கால் புத்தகம் ஒன்றும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல் ஒன்றும் திருத்தந்தைக்குப் பரிசாகக் கொடுக்கப்பட்டன.



அதன் பின்னர் அரசு அதிகாரிகளுடனானச் சந்திப்பு தொடங்கியது. அதிகாரிகள் திருத்தந்தைக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். பின்னர் அரசுத் தலைவர் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார்.

அதன் பின்னர் திருத்தந்தையும் தமது முதல் உரையை வழங்கினார்.



அதன் பின்னர் திருப்பீடத் தூதரகம் சென்று மதிய உணவு அருந்தி ஓய்வும் எடுப்பார் திருத்தந்தை. மாலை ஐந்து மணியளவில் யூதமதப் பிரதிநிதி குழுவைச் சந்திப்பது, பிரான்சின் கல்வி, கலாச்சார, அறிவியல் துறைகளின் ஏறத்தாழ 700 பேருக்கு பெர்னார்தாம் மையத்தில் உரையாற்றுவது, நோத்ரு தாம் பேராலயத்தில் குருக்கள், இருபால் துறவிகள், குருத்துவ மாணவர்கள் மற்றும் தியோக்கன்களுடன் மாலைத் திருப்புகழ் மாலை செபிப்பது, பேராலய வளாகத்தில் இளையோரை வாழ்த்துதல் இன்றைய திருப்பயணத் திட்டத்தில் குறிக்கப்பட்டுள்ளன.



பிரான்சு நாடு, கத்தோலிக்கத் திருச்சபையின் மிக மூத்த மகள் என்ற பெருமையைக் கொண்டது. இது ஐரோப்பா கண்டத்தின் மிகப் பழமையான கிறிஸ்தவ நாடு, மேற்கத்திய ஐரோப்பாவில் மிக முக்கிய நாடு, கத்தோலிக்க எண்ணங்களுக்கும் கலைக்கும் மையம் என்றெல்லாம் புகழப்படுகின்றது. ஐந்தாம் நூற்றாண்டில் அரசர் குளோவிஸ் திருமுழுக்குப் பெற்றதிலிருந்து பிரான்சின் புகழ் பரவத் தொடங்கியது. 1789 ஆம் ஆண்டில் ப்ரெஞ்ச் புரட்சி தொடங்கும் வரை கத்தோலிக்கம் பிரான்சின் அரசு மதமாகவும் இருந்தது. முடியாட்சியை வெறுத்த மக்கள் புரட்சியில் ஈடுபட்டனர். திருச்சபை அரசருடன் நெருங்கிய உறவு கொண்டிருந்ததால் கோபமடைந்த மக்கள் அப்புரட்சியின் போது திருச்சபை சொத்துக்களை அழித்தனர். திருச்சபை அதிகாரிகளைத் தாக்கினர். இறுதியாக, 1905இல், கத்தோலிக்கம், அரசு மதம் என்பது சட்ட ரீதியாகத் தடை செய்யப்பட்டது. பிரான்சு சமய சார்பற்ற நாடாக மாறியது.



பிரான்சு, பல பெரிய புனிதர்களையும் பல துறவற சபைகளையும் கொண்ட நாடு. இந்நாட்டிற்குப் பெருமை சேர்ப்பதில் முக்கிய இடம் வகிப்பவைகளில் முதன்மையானது லூர்து நகர். இந்நகரில் அன்னை மரியா பெர்னதெத் சுபிரு என்ற ஏழை நோயாளிச் சிறுமிக்கு 18 தடவைகள் காட்சி கொடுத்தார். இதன் 150 ஆம் ஆண்டின் நிறைவு விழாவைச் சிறப்பிப்பதற்கே திருத்தந்தை லூர்து நகர் செல்கிறார்.



திருச்சபையின் மிக மூத்த மகளான பிரான்சு கத்தோலிக்கரைச் சந்தித்து அவர்களை விசுவாசத்தில் உறுதிப்படுத்துவதற்குத் திருத்தந்தையர்கள் விரும்புவதில் வியப்பில்லைதான். திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களின் இத்திருப்பயணத்தை பிரான்சின் பெரும்பாலான மக்கள் ஆவலோடு எதிர் நோக்கியிருக்கின்றனர் என்றே அண்மை கணிப்புகள் தெரிவிக்கின்றன. அவர் பாரிஸ் சென்ற விமானப் பயணத்தில் நிருபர்களிடம், புதுமைகளைத் தேடி நாம் லூர்து செல்லவில்லை, மாறாக அன்பின் அன்னையைக் காணவும் எல்லா வேதனைகளுக்கும் உண்மையான குணமளித்தலைக் காணவும் செல்வதாகவும் ௬றினார். சமயப் பற்று குறைந்து வரும் பிரான்சில் திருத்தந்தையின் இப்பயண நோக்கம் நிறைவேற நாமும் அன்னையிடம் செபிப்போம்.

  








All the contents on this site are copyrighted ©.