2008-09-10 15:56:15

திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட், கர்தினால் இன்னோசெந்த்தியை நினைவு ௬ருகிறார்


செப்.09, 2008. மறைந்த கர்தினால் அந்தோணியோ இன்னோசெந்த்தி, தனது இறையரசுப் பணியை மிகுந்த பக்தியுடனும் தாராள மனத்துடனும் செய்தார் என்று பாராட்டினார் திருத்தந்தை 16ஆம் ஆசீர்வாதப்பர்.

இன்று காலை புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருப்பீடத்தின் முன்னாள் செயலர் கர்தினால் ஆஞ்சலோ சொதானோ நிகழ்த்திய கர்தினால் இன்னோசென்ந்தியின் அடக்கச் சடங்குத் திருப்பலிக்குப் பின்னர் மறையுரையாற்றிய திருத்தந்தை, அக் கர்தினாலின் வாழ்க்கையைச் சுருக்கமாக எடுத்துரைத்தார்.

ப்பியசோலே என்ற இத்தாலிய மறைமாவட்டத்தைச் சேர்ந்த இவர் 1938இல் குருவாக அருள் பொழிவு பெற்றார். பின்னர் அவரது மறைமாவட்ட குருத்துவ கல்லூரியில் கல்வி கற்றுக் கொடுத்தார்.

இரண்டாம் உலகப் போர் நடந்த கஷ்டமான காலத்தில் அவரது ஆயருக்கு மேய்ப்புப் பணியில் உதவினார். அச்சமயம் தன்னலமற்ற தாராளமனத்துடன் மக்களுக்கு உதவி செய்து வந்தார். நாடுகளை விட்டு வெளியேற்றப்படும் ஆபத்தை எதிர் நோக்கிய மக்களைக் காப்பாற்றினார். இதனால் அவர் கைது செய்யப்பட்டு சுடப்படுவதற்குத் தீர்ப்பிடப்பட்டார், எனினும் அவர் தண்டனையை நிறைவேற்றுவோர் முன் நிற்கையில் அது இரத்து செய்யப்பட்டது என்பதையும் தனது மறையுரையில் நினைவு௬ர்ந்தார் திருத்தந்தை.

திருப்பீடத் தூதரகப் பணியில் அவர் ஈடுபட்டதையும் குறிப்பிட்ட திருத்தந்தை, அவர் பரகுவாய் நாட்டுக்கானத் திருப்பீடத் தூதுவராகப் பணியாற்றியதையும் குறிப்பிட்டார்.

கிறிஸ்தவர் எப்பொழுதும் இயேசுவுடன் வாழ்கின்றனர், எனவே கிறிஸ்தவர்க்கு சாவு என்பது ஆதாயமே என்ற புனித பவுலின் வார்த்தைகளைக் குறிப்பிட்ட திருத்தந்தை, கர்தினால் இன்னோசெந்த்தி கத்தோலிக்கத் திருச்சபையின் பல்வேறு துறைகளில் ஆற்றியுள்ள அரும்பணிகளை மிக உருக்கமுடன் எடுத்துரைத்தார்.

விசுவாசமும் நம்பிக்கையும் எல்லா உண்மைகளின் மிகப் பெரும் வழிகள் என்றும் உரைத்த திருத்தந்தை, அன்பு ஒருநாளும் முடிவுறாது என்று கர்தினால் இன்னோசெந்த்தியின் விருது வாக்கை நினைவுபடுத்தி தனது மறையுரையை நிறைவு செய்தார்.

கடந்த சனிக்கிழமை இறைபதம் அடைந்த 93 வயதாகும் இத்தாலிய கர்தினால் அந்தோணியோ இன்னோசெந்த்தி, குருக்கள் பேராயத் தலைவராகவும், திருப்பீடக் கலாச்சார பாரம்பரிய வளங்கள் அவையின் தலைவராகவும், எக்லேசியா தேய் அவையின் தலைவராகவும், திருவழிபாடு மற்றும் திருவருட்சாதன பேராயச் செயலராகவும் பணியாற்றியிருப்பவர். இவர் 1985இல் கர்தினாலாக உயர்த்தப்பட்டார். இவரின் இறப்போடு திருச்சபையில் கர்தினால்களின் எண்ணிக்கை 193 ஆகவும் இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 116 ஆகவும் மாறியது.



 








All the contents on this site are copyrighted ©.