2008-08-27 15:27:39

ஒரிசாவில் கிறிஸ்தவர்க்கெதிராய் இடம் பெறும் வன்முறை குறித்து திருத்தந்தை ஆழ்ந்த கவலை


ஆகஸ்ட் 27 ஒரிசா மாநிலத்தில் கிறிஸ்தவர்க்கெதிராய் இடம் பெறும் தொடர் வன்முறை குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்த அதேவேளை, இம்மோதல்களுக்குக் காரணமான இந்துமதத் தலைவர் ஸ்வாமி லஷ்மானந்தா சரஸ்வதி கொல்லப்பட்டது குறித்த வருத்தத்தையும் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

RealAudioMP3 இன்று புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் இவ்வாறு ௬றிய திருத்தந்தை, இவ்வன்முறையில் சிலர் கொல்லப்பட்டுள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர் இன்னும் கிறிஸ்தவர்களின் வீடுகளும் கிறிஸ்தவ ஆலயங்களும் கருணை இல்லங்களும் அழிக்கப்பட்டுள்ளன என்றும் உரைத்தார்.

மனித வாழ்வின் புனிதத் தன்மை அனைவராலும் மதிக்கப்பட வேண்டிய தேவை உள்ளது, இம்மனித வாழ்வுக்கு எதிரான ஒவ்வொரு தாக்குதலையும் வன்மையாய்க் கண்டிக்கிறேன் என்றும் திருத்தந்தை ௬றினார்.

அதேவேளை மிகவும் கடுமையாய்ப் பாதிக்க்ப்பட்டுள்ள சகோதர சோதரிகளுடன் தான் ஆன்மீக முறையில் ஒன்றிணைந்து தோழமை உணர்வு கொண்டிருப்பதாக மேலும் திருத்தந்தை ௬றினார்.

ஒரிசாவில் பல சமயத்தவர் அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்வதற்கு தேவையான அனைத்து வழிவகைகளும் எடுக்கப்படுமாறு அப்பகுதியின் சமய மற்றும் அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை.

கடந்த சனிக்கிழமை இரவு கொண்டமால் மாவட்டத்தின் விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் ஸ்வாமி லஷ்மானந்தா சரஸ்வதி மற்றும் நான்கு பேர் அத்தலைவரின் இல்லத்தில் கொல்லப்பட்டனர். இதற்கு மாவோயிஸ்ட், புரட்சியாளர்கள் காரணம் என்று சொல்லப்பட்டாலும் இக்கொலைக்குப் பின்னால் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டி கிறிஸ்தவர்களுக்கு எதிரான வனமுறைத் தாக்குதல்களை இந்து தீவிரவாதக் கும்பல்கள் நடத்தி வருகின்றன. இதுவரை குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் ஏறத்தாழ எல்லாருமே கிறிஸ்தவர்கள்.








All the contents on this site are copyrighted ©.